
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குருபூஜை
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் ஆண்டு தோறும் சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா, குரு பூஜை விமரிசையாக நடந்து வருகிறது இந்த ஆண்டு தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பசும்பொன்னுக்கு வரவில்லை.
முதலமைச்சர் விஜய்
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன்.
வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பசும்பொன் விழாவில் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அரசு சார்பில் மரியாதை
மதுரையில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜீவ், மதன்ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்துக்குச் சென்றனர். அங்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மு.க.ஸ்டாலின் வருகை
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மருது பாண்டியர்களின் 225-வது குருபூஜை விழாவையொட்டி, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“ வரலாறாய் வாழ்ந்து, வீரத்துக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் பசும்பொன் திருமகனாரைப் போற்றுகிறேன். விடுதலைப் போரில் நேதாஜியுடன் இணைந்து செயலாற்றிய தீரர். குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து,பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராளி. உழவர்களின் நலனுக்காகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் சங்கங்களை நிறுவியவர்; போராடிச் சிறை சென்ற தியாகி. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மக்களுக்காகக் குரல் கொடுத்த மாண்பாளர். ‘பத்தரை மாற்றுத் தங்கம்..பசும்பொன் சிங்கம்’ என்று மக்களால் போற்றப்பட்ட பசும்பொன் திருமகனாரின் புகழ் வாழ்க” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் சென்ற முன்னாள் அமைச்சர்கள் பலர் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மதுரையில் உள்ள தேவர் சிலைக்கும், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின், தலைவர்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



