
மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என்று எல்.முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்.முருகன் ஆகிய நான், 13.10.2026 அன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும், மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பதவியிலிருந்தும் விலக பிரதமரிடம் அனுமதி கோரினேன். அவரது அனுமதி பெற்றதும் எனது ராஜினாமாவை சமர்ப்பித்தேன்.
எனது ராஜினாமாவின் ஒரே நோக்கம், 2029 ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, அடிமட்டத்தில் இருந்து தொடங்கி, கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மேம்படுத்து தான். அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே ஆகும். நாட்டின் குடிமக்களின் நலனுக்காகவும், குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், மேற்கண்ட பணியை மேற்கொள்வது எனது பொறுப்பாகும். மத்திய அரசின் நிலையான ஆதரவைப் பெற்று, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், கொள்கைகள், மற்றும் செயல்திட்டங்களுடன் இணைந்து தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
மேலும், தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவது எனது கடமையாகும். இதன் மூலம், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு எந்த அளவிற்கு தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும். கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மேம்படுத்தும் நோக்கில் நான் மேற்கொண்டுள்ள தற்போதைய பொறுப்பை ஏற்றுக் கொள்ள இயலாத சிலர், டிஜிட்டல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக தேவையற்ற மற்றும் இழிவான கருத்துகளைத் தெரிவித்து அவற்றைப் பரப்பி வருகின்றனர்.
இத்தகைய கருத்துகள் அவதூறானவை மட்டுமல்லாமல், வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையும் ஆகும். இந்தக் கருத்துகள் அனைத்தும் எவ்வித ஆதாரமும் அற்றவை; முற்றிலும் புனையப்பட்டவை; தீய உள்நோக்கம் கொண்டவை; அரசியல் நோக்கங்களால் தூண்டப்பட்டவை. நான் கடின உழைப்பின் மூலம் பெற்றுள்ள நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதும், எனது ராஜினாமாவிற்குப் பல்வேறு தவறான அர்த்தங்களைக் கற்பித்து, பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குவதுமே இவற்றின் ஒரே நோக்கமாகும்.
கட்சியிடம் இருந்தும், பிரதமரிடம் இருந்தும் நான் பெற்ற அனைத்தும், எனது பொறுப்புணர்வை மேலும் ஆழப்படுத்தி வருகின்றன. பிரதமர் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கம், பொதுவாழ்வில் ஈடுபடக் காரணமாக இருந்த பணிகளுக்கு என்னை மேலும் அதிகமாக அர்ப்பணிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி வருகிறது.
எனவே தற்போது தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்தும் பணியில் முழு நேரமாக என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். 2029 மக்களவைத் தேர்தலுக்காகக் கட்சியைத் தயார்படுத்தும் பணியில், தமிழ்நாடு பாஜகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து எனது முழு நேரத்தையும், ஆற்றலையும் செலவிடவுள்ளேன்.
ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு தெருவிற்கும் சென்று, மக்களைச் சந்தித்து, நமது கட்சித் தொண்டர்களுக்குத் துணையாக நின்று, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கட்சியின் செல்வாக்கையும், அமைப்பையும் விரிவுபடுத்தும் பணியில் முழுமையாக ஈடுபடவுள்ளேன்.
2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்துவதற்காக, அடிமட்ட அளவில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவதே எனது ராஜினாமாவின் ஒரே நோக்கமாகும். அரசியல் உள்நோக்கத்துடனும் தீய எண்ணத்துடனும் சிலரால் முன்வைக்கப்படும் பிற குற்றச்சாட்டுகளும், தேவையற்ற அவதூறுப் பிரசாரங்களும் உண்மைக்குப் புறம்பானவை. இத்தகைய கருத்துகளைப் பரப்புவது, எனது நற்பெயருக்கும் மதிப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் அவதூறுச் செயலாகும். மேலும், இவை பிற தனிநபர்களையும் பாதிக்கக்கூடியவை. இதன் மூலம், தமிழ்நாட்டு மக்களிடையே தேவையற்ற அமைதியின்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் பரந்த நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான, அவதூறான மற்றும் இழிவான பிரசாரங்களைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக, குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



