
தமிழக வெற்றிக் கழக கொடி நிறத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் செயலி மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றத்தில் இருந்து பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் போக்குவரத்து துறையில் பழைய டெண்டர்கள் ரத்து செய்து புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
சமீபத்தில் புதிய பேருந்து ஒன்றுக்கு தமிழக வெற்றி கழக கொடி நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தின் (டிஎன்எஸ்டிசி) செயலி தமிழக வெற்றி கழகத்தின் கொடியின் நிறமான சிவப்பு, மஞ்சளுக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக வெள்ளை நிறத்தில் இருந்த செயலியில், தற்போது சிவப்பு, மஞ்சள் நிறத்தில் இடது பக்கம் முதலமைச்சர் விஜய் புகைப்படமும் வலது பக்கம் போக்குவரத்து கழக இலட்சினையும் இடம்பெற்றுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் டிஎன்எஸ்டிசியின் வலைதளத்தின் நிறம் இதுவரை மாற்றப்படவில்லை.



