
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 30 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஏராளமான தங்கச் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. முறையான உபகரணங்கள் இல்லாமல் இந்த சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி உள்ளது. மீண்டும் அப்படியொரு சம்பவம் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் நேற்று (ஆக.18) நடைபெற்றுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள நனா-மாம்பேரே மாகாணத்தில் உள்ள ஹப்பா பகுதியில் பாரம்பரியமான தங்கக்சுரங்கம் உள்ளது. இதில் ஏராளமானோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் உள்ளே சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து உடனடியாக மீட்பு குழுவினர் விரைந்து வந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 30 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து மாகாணத்தின் துணைமேயர் சுலைமான் கூறுகையில், “ஹப்பா பகுதி மக்கள் உதவியுடன் மீட்புக்குழுவினர் பலமணி நேரம் போராடி 30 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். காயமடைந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது” என்று தெரிவித்தார்.
அரசு செய்தித் தொடர்பாளர் எவரிஸ்ட் என்கமானா கூறுகையில், “தங்கக் சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்க அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர்” என்றார்.



