
நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 400 பேர் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் இன்று(ஆக.26) போட்டேகோஷி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த வெள்ளப்பெருக்கால் சியாப்ருபெசி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் நீர்வரத்து திடீரென உயர்ந்ததற்கு பனிப்பாறை உடைந்தது காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் ரசுவா, நுவாகோட், தாடிங், கோர்கா, சித்வான் ஆகிய மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கினால் நுவாகோட், தாடிங் மாவட்டங்களில் 105 இந்தியர்களைக் காணவில்லை என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 400 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்றும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



