
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 160 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியுடனான நேபாளத்தின் முக்கிய வடக்கு எல்லைக் கடக்கும் இடமான ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் இருந்து போடோ கோஷி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நேற்று (ஆக.26) காலை சுமார் 9 மணியளவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள் சாலைகள், கட்டிடங்கள் அனைத்தும் சேதம்டைந்தன.
இந்த வெள்ளப்பெருக்கால் கோஷி ஆற்றின் ராசுவா, நுவாகாட், தாடிங் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக, வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற 19 பாலங்களும், 40 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளன. திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஏராளமானோர் மாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பணியில் இருந்த 44 நேபாள ராணுவ வீரர்கள், பல்வேறு காவல் நிலையங்களில் பணியிலிருந்த 28 காவலர்கள் மற்றும் நேபாள ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 13 பேர் ஆகியோருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்மின் திட்டங்களில் பணிபுரியும் 60 ஊழியர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 391 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 93 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகியோருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேபோல, தமிழ்நாட்டில் இருந்து சென்ற 57 சுற்றுலாப் பயணிகளில் 37 பேரின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவரவில்லை என்றும், 20 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 750 பேரை காணவில்லை என்றும்,அதில் 133 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிச்சரிவு மற்றும் பனி ஏறி உடைப்பு காரணமாகப் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என நேபாள வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உலகப் பயண மற்றும் சுற்றுலா மன்றத்தின் தலைமைச் செயல் அதிகாரி குளோரியா குவேரா கூறுகையில், நேபாளத்தில் நிகழ்ந்து வரும் இந்த இயற்கை பேரழிவை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் இந்தப் பேரழிவுத் துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் என் இதயம் இருக்கிறது,” என்று அவர் கூறினார்.



