கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து… 7 பேர் உயிரிழப்பு

கென்யாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 6 சுற்றுலா பயணிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு கென்யாவின் சம்புரு மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். லோய்சாபா வனப்பாதுகாப்பு பகுதியில் இருந்து இவாசோ நைரோ பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது என்று கென்யா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் யூரோகாப்டர்( EC130 B4) வகையைச் சேர்ந்தது என்று விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ஐந்து அமெரிக்கர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் காவல்துறை மற்றும் அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளன. விமானத்தில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்து விட்டதாக சம்புருவின் காவல்துறை தலைவர் டேவிட் என்கோரோய் தெரிவித்துள்ளார். கென்யா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் அமெரிக்கர்கள் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த பகுதியில் உள்ளூர் சஃபாரி நிறுவனமான ட்ராபிக் ஏர் கென்யா, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக தனது இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது. கென்யாவில் மலைப்பாங்கான பகுதிகளில் ஹெலிகாப்டர் விபத்து அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு கென்யாவின் மலைப்பாங்கான பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்பட ஆறு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *