
சேர்ந்தே இருப்பது வறுமையும், புலமையும் என்ற புகழ் பெற்ற ‘திருவிளையாடல்’ வசனத்தை எழுதிய ஏ.பி.நாகராஜன் திரையிசை நாயகர்களை மட்டுமே பார்த்தவர் போலும். நானறிந்த, என்னோடு பழகிய இசைக் கலைஞர்களை எல்லாம் பார்த்திருந்தால், சேர்ந்தே இருப்பது வறுமையும், இசையும் என்று திருத்தி எழுதியிருப்பார். செல்வம் மாஸ்டரை நினைக்கும் போதெல்லாம் எனக்கு இந்த வசனம் தான் மனதில் தோன்றும்.
செல்வம் மாஸ்டர் வாய்ப்பாட்டு, ஹார்மோனியம், மிருதங்கம், தபேலா என்று எல்லாம் வாசிக்கும் ஒரு அபூர்வக் கலைஞர். அவரது வீடு பாட்டுக் கிளாஸ் நடத்துமளவு இட வசதி இல்லாத சின்ன காம்பௌண்ட் வீடு என்பதால் மாணவர்கள் வீடுகளுக்குப் போய் பாட்டு டியூஷன் நடத்துவது, ஆர்க்கெஸ்ட்ராக்களில் கீபோர்ட், தபேலா, பஜனைகளுக்கு மிருதங்கம் என்று வாசித்து எப்படியோ வாழ்க்கையை ஓட்டியவர். வீட்டிற்கு வந்து என் மகளுக்கு வாய்ப்பாட்டு கற்றுத் தந்து கொண்டிருந்தார். அவருடைய குடும்பக் கஷ்டத்திற்கு உதவ, நானும் அவரிடம் கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். மகள் பாதி நாள் நாளைக்கு டெஸ்ட், ஸ்பெஷல் கிளாஸ் என்று வகுப்பு வேண்டாம் என்பாள். நமக்கு இருக்கவே இருக்கிறது – சங்க, தமுஎச, கட்சி, தோழமை சங்கங்களின் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்.
எங்கள் இருவரின் இசை வகுப்புகளுமே நாங்கள் கற்றுக் கொள்வது என்பதாக இல்லாமல் மாஸ்டருக்கு நம்மாலான உதவி என்பதாகத் தான் இருந்தது. என் தாயார் தான் ஃபீஸ் வீணாகிறது என்று புலம்புவார். ஆனால், வகுப்பு நடக்கும் நாட்களில் மிகவும் திருப்தியாக இருக்கும். சமயங்களில் மாஸ்டர் மிருதங்கத்தைத் தூக்கிக் கொண்டு வந்து பாப்பாவை பாடச் சொல்லி வாசிப்பார். என் கீபோர்டுக்கு வாசிப்பார். தானும் மிருதங்கம் வாசித்தபடியே பாடிக் காட்டுவதும் உண்டு. அப்படித் தான் ஒரு நாள் மாஸ்டர் சைக்கிளில் கேரியரில் கட்டிய மிருதங்கத்தோடு வந்தார். அன்று எங்களுக்கு வகுப்பு கிடையாது. மாஸ்டரின் முகத்தைப் பார்த்தாலே ஏதோ சரியில்லை என்று தெரிந்தது. அது ஏனோ இசைக்கலைஞர்கள் வந்தால், பாயோ, ஜமுக்காளமோ விரித்து உட்காரச் செய்வதாக ஒரு வழக்கம் இருந்தது.
கலைஞனை கீழே உட்காரச் செய்யக் கூடாதோ, மாஸ்டர் உட்கார்ந்ததும், மிருதங்கத்தின் உரையை கழற்றினார். நான் ஃப்ரிட்ஜிலிருந்து குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து வைத்தேன். கடகடவென்று அரை பாட்டில் தண்ணீரைக் குடித்தார். ஜில் தண்ணீரால் எதுவும் ஆகாத தெய்வீகக் குரல் அவருக்கு! மிருதங்கத்தை ஒரு உருட்டு உருட்டி விட்டு கணீரென்று ‘கலைவாணி நின் கருணை தேன்மழையே’ என்று மோகனகல்யாணியில் ஆரம்பித்தார். காலம் காலமாக பெண்குரலில் கேட்டுப் பழகிய ஒரு புகழ்பெற்ற பாடலை ஆண்குரலில் நீங்கள் கேட்டதுண்டா? அது ஒரு தனீ… அனுபவம். கலைவாணியின் கருணை உள்ளவர்களுக்குத் தான் அந்த அனுபவம் கிடைக்கும் என்று இப்போது தோன்றுகிறது ! திரும்பவும் ஒரு வாய் தண்ணீர் குடித்தார். .திரும்பவும் பாட ஆரம்பித்தார்.
பொன்னான வாழ்வு
மண்ணாகிப் போமா?
துயரம் நிலைதானா?
உலகம் இதுதானா?
பண்பாடு இல்லாமல் – மண் மீதே
பாழாகி நொந்தேனே…
தேனான வாழ்வு
திரை மாறிப் போச்சே !
நிம்மதி இழந்தாச்சே !
தீராத பழியாச்சே !
திருச்சி லோகநாதன் பாட்டு என்றாலும், மாஸ்டா் மிருதங்கத்தோடு கே.ஆர்.ராமசாமி குரலில் பாடும் போது, பாட்டின் துயரம் இன்னும் இன்னும் கூடுதலாக அவரையும், என்னையும் அழுத்துவதாகப்பட்டது. பாடி முடித்ததும், வேட்டி முனையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
“எதுவும் பிரச்சனையா மாஸ்டர்?” என்றேன்.
“ ஒரு ஆயிரம் ரூபா தரமுடியுமா? நா கிளாஸ் எடுத்து கழிச்சுற்றேன்,” என்றவர் சின்ன இடைவெளி விட்டு, “நீங்க தராட்டி இந்த மிருதங்கத்த சிம்மக்கல்ல வின்சென்ட்டு கிட்ட விக்கறதா இருந்தேன். எங்க ஐயாவோடது.. அஞ்சுகட்ட மிருதங்கம்… பலாக்கட்டைல செஞ்சது. .. இப்ப இந்த மாதிரியெல்லாம் வர்றதே இல்ல…” என்றார் மாஸ்டா்.அப்பாவின் மிருதங்கத்தை விற்கப் போவதாக அவர் சொன்னதும் நான் கலங்கிப் போனேன். அந்தக் கணத்தில் ராமர் அல்லது அனுமார் வேடமிட்டு வீட்டு வாசலில் நின்று ஹார்மோனியத்தோடு ஏதோ தெலுங்குப் பாட்டு பாடி யாசகம் கேட்கும் கலைஞர்களின் நினைவு வந்தது. இப்போது போலன்றி, அக்காலத்தில் இப்படிப்பட்ட பாடக யாசகர்கள் சுருதி சுத்தமாகப் பாடுவார்கள். ஏனோ எல்லோருக்குமே கண்டசாலாவின் குரல்தான் இருக்கும். என் நண்பர் கவிஞர் கவிதாகுமார் இப்படிப்பட்ட யாசகர்கள் பற்றி செம்மலரில் எழுதிய ஒரு அற்புதமான கவிதை வேறு நினைவிற்கு வந்து என் துக்கத்தை அதிகரித்தது.
அப்போது எங்கள் இருவருக்கும் சேர்த்து மாதம் 300 ரூபாய் .ஃபீஸ். மூன்று மாதத்தில் கழிந்து விடும். நல்லவேளையாக வீட்டில் பணம் இருந்தது. தந்தேன். மாஸ்டர் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாங்கிக் கொண்டார். என்ன கஷ்டமோ? அவர் கண்களில் அவரால் கட்டுப்படுத்த முடியாதபடிக்கு கண்ணீர். மிருதங்கத்தை சைக்கிள் கேரியரில் கட்டிக் கொண்டு அவர் மெதுவாக சென்ற காட்சி என்னால் வாழ்வில் மறக்க முடியாத சில துயரக் காட்சிகளில் ஒன்று.
அதன்பிறகு அவர் வரவேயில்லை. அவரது கைபேசி எண் சுவிட்ச் ஆஃப்.
“எத்தனையோ ஸ்டூடண்ட்ஸ் இருக்கும் போது யார்கிட்ட இந்த மாதிரி வேலையெல்லாம் பலிக்கும்னு பாத்து கரெட்டாக பிளான் பண்ணி வந்திருக்கார். நீயும் ஏமாந்துட்ட ,” என்று அம்மா தான் புலம்பிக் கொண்டே இருந்தாள். அம்மாவிற்கு நான் இவ்வாறு ஏமாறுவதில் வருத்தமும், ஏமாற்றப்பட்டாலும் அப்பாவியாக, பிறருக்கு உதவி செய்யும் நல்லவனாக இருப்பது குறித்து பெருமையும் ஒருசேர இருப்பதை நான் அறிவேன். அதனால் நான் அம்மா இப்படி ஏதேனும் சொல்லும் போது, பதில் எதுவும் சொல்ல மாட்டேன்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்யாண வீட்டில் கச்சேரியில் தபேலா வாசித்துக் கொண்டிருந்த மாஸ்டர் என்னிடம் பேசினார். கோமதிபுரத்தில் ஒரு பெரிய ரூம் பார்த்திருக்கிறார். எல்லா சுருதிகளுக்கும் மிருதங்கம் வாங்கிப் போடப் போகிறார். மீண்டும் வகுப்புகள் எடுக்கப்போகிறார். என்னிடம் பணம் வாங்கியதை மறக்கவில்லை. எப்படியாவது வகுப்பு எடுத்து கழித்து விடுவாராம். தப்பாக நினைக்க வேண்டாம் என்று மன்றாடினார். நான், “அதெல்லாம் ஒண்ணுமில்ல… விடுங்க மாஸ்டர்,” என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன்.
மற்ற ஆர்கெஸ்ட்ரா நண்பர்கள் மூலம் மாஸ்டர் பற்றிய தகவல்கள் கேட்டு அதிர்ந்து போனேன். அன்று அவர் என்னிடம் எதற்காகப் பணம் வாங்கிக் கொண்டு சென்றார் என்பதை சொல்லக் கூச்சப்பட்டுத் தானே சொல்லாமல் சென்றார்? அதை நான் உங்களிடம் இப்போது சொல்வது எப்படி சரியாக இருக்கும்? வெளியில் சொல்ல முடியாத அந்தக் காரணம் என் மனதுக்குள்ளேயே இருந்து விட்டுப் போகட்டும். தன் அப்பாவின் வாத்தியத்தை இக்கட்டான ஒரு பணக் கஷ்டத்திற்காக விற்கத் துணியும் அவல நிலை மட்டும் எந்நாளும் எந்தக் கலைஞனுக்கும் வராமல் இருக்கட்டும்.
– ச.சுப்பாராவ் (நிறைவு பெற்றது)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.




“பொன்னான வாழ்வு
மண்ணாகிப் போமா?
துயரம் நிலைதானா?
உலகம் இதுதானா?
பண்பாடு இல்லாமல் – மண் மீதே
பாழாகி நொந்தேனே…
தேனான வாழ்வு
திரை மாறிப் போச்சே !
நிம்மதி இழந்தாச்சே !
தீராத பழியாச்சே ! ”
இந்த பாடலுக்கும் அவரது பணத் தேவைக்கும் தொடர்பு உள்ளது போல் தோன்றுகிறது.
*தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்*
*இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது சாமி* (சிந்து பைரவி சிவகுமார்) JKB யின் நிலை நினைவில் வந்து சென்றது…🎶