
கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (செப்.21) ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கேரளத்தை புரட்டிப்போட்ட கனமழையால் ஒரே நாளில் 9 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் பெய்த கனமழையால் ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 30 பேர் உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டம் வட்டவடா கோட்டக்கம்பூரில், விவசாய நிலத்தில் மழைக்கு ஒதுங்கியிருந்த குடும்பத்தினர் மீது திடீரென மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி சின்னு உயிரிழந்தனர். மேலும் பாலகிருஷ்ணனின் மனைவி மரியம்மா படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனமழையால் கோட்டயம் மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தேக்கோய் அருகே நிலச்சரிவில் சிக்கி சென்னையைச் சேர்ந்த சங்கீதா(35) உயிரிழந்தார். பூஞ்சார் பகுதியில் வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில் ஜோசப்(80) என்ற முதியவர் உயிரிழந்தார். இதனிடையே, கேரளாவில் அடுத்த சில நாட்களிலும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் மழை நிலவரத்தை மணிக்கு ஒருமுறை கண்காணிக்க அதிகாரிகளுக்கு கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் உத்தரவிட்டுள்ளார்.



