பிஹாரில் மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு

பிஹாரில் பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த முக்கிய குற்றவாளியை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.

பிஹார் மாநிலம், ஜமுயில் பயிற்சி வகுப்பு முடிந்து கடந்த 19-ம் தேதி வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பள்ளிச் சிறுவன், சிறுமியை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி தாக்கியது. அத்துடன் அந்த சிறுமியிடம் அந்த கும்பல் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. அத்துடன் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் ஜமுயில் போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில், சிறுமிக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கும்பல், ஒரு புதருக்குள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு இன்று (செப்டம்பர் 22) தகவல் கிடைத்து. அப்போது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டார். அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்ததாக துணை ஆய்வாளர் ஜெனரல் ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார். அவரின் காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதலில் இரண்டாவது குற்றவாளியும் ஈடுபட்டதாக அவர் கூறினார். அவர்கள் இருவரும் 25 வயதுடையவர்கள்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்புச் சட்டம் (போக்சோ) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பிஹார் துணை முதலமைச்சர் விஜய் குமார் சவுத்ரி தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *