செவிலியரை எரித்துக் கொல்ல முயன்ற வாலிபர்: சுட்டுப்பிடித்த போலீஸ்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் செவிலியரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற குற்றவாளியை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக ராஜேஸ்வரி(35)என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பணியில் இருந்த ராஜேஸ்வரி மீது திடீரென ஒரு வாலிபர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் ராஜேஸ்வரி உடலில் தீப்பற்றிக் கொண்டது. இதனால் படுகாயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பான அரசு மருத்துவமனைக்குள் நடந்த இந்த விபரீத சம்பவத்தால் பொதுமக்கள், நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது செவிலியர் ராஜேஸ்வரியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றவர் பிரகாஷ் என்பது தெரிய வந்தது.

அவர் மாதவரத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது பிரகாஷை கைது செய்ய முயன்ற காவல் உதவி ஆய்வாளர் தமிழரசனை பிரகாஷ் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காவல் ஆய்வாளர் சிவகுமார், துப்பாக்கியால் பிரகாஷை சுட்டார். இதில் பிரகாஷுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எதற்காக அவர் செவிலியர் ராஜேஸ்வரியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *