
நெடுஞ்சாலைத்துறையில் நீடிக்கும் நிர்வாக குளறுபடிகளைக் களையக்கோரி அக்.6-ம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்பு போராட்டம் நடத்த பட்டய பொறியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இஅது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நெடுஞ்சாலைத்துறையில் கடந்த நான்கு மாதங்களாக நிர்வாக குளறுபடிகள் நீடித்த வண்ணம் உள்ளன. உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் உதவி கோட்டப் பொறியாளர்கள் பணியிட மாறுதல் வெளிப்படையாக நடைபெறாமல் உள்ளது. ஒரே இடத்தில் 5 வருடங்களுக்கு மேல் உள்ளவர்கள் இன்றுவரை பணியிட மாறுதுல் செய்யப்படவில்லை.
மேலும் ஆண்டு தோறும் வழக்கமாக வழங்க வேண்டிய பதவி உயர்வுகள் பல்வேறு பணிநிலை அலுவலர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்படாமல் அடுத்த ஆண்டு பதவி உயர்வு காலமும் கூட இன்று வரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் நெடுஞ்சாலைத்துறைக்கு இருக்கும் சொந்த அலுவலகங்களை பயன்படுத்துவதற்கு போதிய தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை. புதிய சாலை மற்றும் பாலப்பணிகள் சம்பந்தமாக மதிப்பீடுகள் தயார் செய்வதற்கு உரிய செலவினங்களை உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர்கள் எந்த அடிப்படையில் பெற வேண்டும் என்ற நிர்வாக உத்தரவுகள் இல்லை. இதனால் பல ஆயிரங்கள் செலவு செய்த உதவிப்பொறியாளர், இளநிலை பொறியாளர் சொல்ல முடியாத நிலையில் மனஉளைச்சலில் பணியாற்றி வருகிறார்கள்.
தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவதில் அதிகமான காலதாமதம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளை களைய வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் சார்பாக நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
இது போன்ற பிரச்னைகள் தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களின் இல்லத்திற்கு வருகிற 06.10.2026 அன்று பெருந்திரளாக சென்று முறையீடு என முடிவு செய்துள்ளோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



