‘அதை ஓபிஎஸ் தான் செய்ய வேண்டும்’: நயினார் நாகேந்திரன் பேட்டி

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

ஓபிஎஸ் எந்த பக்கம் இருந்தால் நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் செய்தியாளர்களை இன்று (பிப்ரவரி 21) சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,” பிரதமர் மோடி மார்ச் 11-ம் தேதி திருச்சிக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார். திமுகவினர் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறி வருவதாக சொல்கிறீர்கள். ஆனால் 200 இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு எத்தனை சதவீதம் நிறைவேற்றி உள்ளது என்பதை அக்கட்சி தலைவர்கள் மாற்றி மாற்றி ஆளுக்கு ஒரு கருத்து கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் 90 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஏற்கெனவே பொய்யான வாக்குறுதியை கொடுத்தது போல் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை திமுக அரசு கொடுக்கத் தொடங்கியுள்ளது. இப்போது எங்களுக்கு உள்ள கூட்டணி 2021-ம் ஆண்டே இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளும் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. 33 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடைபெறவில்லை. பணப்பெட்டியை வாங்கிக் கொண்டுதான் திமுக கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. திமுக கூட்டணி வலுவிழந்து உள்ளது. அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள். நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவை எடுப்போம்.

ஓபிஎஸ் மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். திமுக அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்கு உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்துக்குள் நாங்கள் செல்லவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவை எடுப்போம்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *