
வீட்டில் வைத்த பொருட்களை சில நேரம் எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடி அலைவோம். எங்கு வைத்தோம் என்று சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து சிந்தித்தால், அது கைக்கெட்டும் தூரம் தான் இருந்திருக்கும். ஆனால், பால்யம் அப்படியல்ல. ஆணிகளோ, பிளைடுகளோ அறையப்பட்ட மரங்களில் இருந்து கசியும் பிசின் போல நினைவுகளின் வழியே அவை நதியென வழிந்தோடுகிறது. பால்யத்தில் நாம் சந்தித்த சில மனிதர்கள் கண்களுக்குமுன் வந்து போகிறார்கள். சில நேரங்களில் கனவுகளில் வந்து விடுவார்கள். அப்படி கனவில் அடிக்கடி வரக்கூடிய ஒருவர் தான் மாரி.
தொலைக்காட்சியில் மருதுபாண்டி திரைப்படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ராம்கியை அடித்து அவர் கை, கால்களில் விலங்கு பூட்டி இழுத்து வருவார்கள். இயக்குநர் மனோஜ்குமார் இயக்கிய படங்களில் கதாநாயகன் கை, கால்களில் விலங்கிட்டு இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள் 1990- காலக்கட்டங்களில் இடம் பெறுவது வழமையானது. ஆனால், நிஜத்தில் அப்படி ஒருவரை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். கை, கால்களில் விலங்கிடப்பட்ட அவர் பெயர் மாரி. உடன் பிறந்த உறவுகள் யாருமற்றவர். எழுந்து நடக்க முடியாது. கை, கால்களில் விலங்கிடப்பட்டதால், அமர்ந்தவாறு தான் செல்ல வேண்டும். இதனால் அவர் கை, கால்கள் முழுவதும் காயமாக இருக்கும். பெரும்பாலும் அவர் புதூர் பேருந்து நிலையத்தில் தான் இருப்பார். தனக்குத்தானே பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்.
ஆனால், சாப்பிடும் நேரத்திற்கு அந்த வீட்டிற்கு வந்து விடுவார் மாரி. அந்த வீட்டில் அழகிய மாதா சிலை இருந்தது. அதனைச் சுற்றி குடில். வீடே தேவாலயம் போல காட்சித்தரும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தொலைக்காட்சியை என் வாழ்வில் அறிமுகப்படுத்தியதும் அந்த வீடு தான். அந்த வீட்டிற்குப் பின்புறம் தான் என் வீடு இருந்தது. அதனால் பள்ளி முடிந்தவுடன் தொலைக்காட்சி பார்க்க அந்த வீட்டிற்கு வந்து விடுவேன்.
அந்த வீட்டில் யார் வந்து உதவி கேட்டாலும் உதவி கிடைக்கும். பெண் குழந்தைகள் அதிகம் இருந்த வீடு அது. அவர்கள் வீட்டு சின்னஞ்சிறு குழந்தைகள் ரோட்டிற்குச் செல்லக்கூடாது என்பதற்காக வீட்டின் வாசலில் ஒரு சின்ன மரப்பலகையை வைத்து மறைத்திருப்பார்கள். கை, கால்களில் விலங்கிடப்பட்ட மாரியை , அந்த பலகையை எடுத்து விட்டு வீட்டுக்குள் வரச்சொன்னாலும் வரமாட்டார். அந்த பலகைக்கு அருகில் வாசலில் அமர்ந்து தான் அவர்கள் தரும் உணவைச் சாப்பிடுவார். இதன் பின் அந்த வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகள் நர்சரி பள்ளியில் படித்தவர்கள். அவர்களிடம் புத்தகங்களைக் கொண்டு வரச்சொல்லி பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார். அவ்வளவு அழகாக மாரி ஆங்கிலம் பேசுவார். அதிகமாக படித்ததால் கிறுக்குப் பிடிச்சிடுச்சு மாரிக்கு என்று தான் ஊர் முழுவதும் பேசிக் கொண்டார்கள். அவர் பேசும் ஆங்கிலத்திற்கும், அவருக்கும் சம்பந்தமிருக்காது. படிப்பைச் சொல்லித் தந்து விட்டு வழக்கம் போல புதூர் பஸ்ஸ்டாண்டில் படுக்கச் சென்று விடுவார். இப்போது போல அவ்வளவு பெரியதாக பஸ் ஸ்டாண்ட் அப்போது இல்லை.

கிறிஸ்துமஸ் உள்ளிட்ட கிறிஸ்தவ பண்டிகைகளின் போது புத்தாடைகளுடன் மாரி காட்சி தருவார். அவர் பாடம் சொல்லித் தரும் வீட்டினர் அளிக்கும் பரிசு அது. அவர் பாடம் நடத்தும் வீட்டில் ஒலிக்கும் கிறிஸ்தவ பாடல்களில் சில என் பள்ளியில் சில நேரங்களில் ஒலித்திருக்கின்றன. பள்ளி பிரேயரின் போது ‘அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா’ என்ற பாடல் ஒலிக்கும். கண்களை மூடிக் கொண்டு அனைவரும் பிரேயர் செய்து கொண்டிருந்தால், நான் யார் யார் இந்த பாடலைப் படிக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருப்பேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன் எனது துவக்கப் பள்ளியில் ஒலித்த அந்த பாடல், இன்று வரை எனக்குப் பிடிக்க காரணம் பி.சுசீலாவின் கம்பீரமான குரல்.
அலைகடலின் ஓசையிலே
அன்புமொழி கேட்குதம்மா…
அன்னையவள் ஆலயத்தில்
அருள் நிறைந்து காணுதம்மா…
என்ற அந்த பாடலில் இருந்த இசையும், அவர் பாடும் லாவகமும் மீண்டும் மீண்டும் பாடலைக் கேட்கத் தோன்றும். இந்த புகழ் பெற்ற பாடலுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்த பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் என்று பலர் தவறுதலாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த பாடலை எழுதியவர் குழந்தை ராஜன். அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் கேட்பவர்களுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். இறையியல் கருத்துகளை மிகவும் எளிய வரிகளில் எழுதிச் சென்ற குழந்தை ராஜன் பாடல்கள் கிறிஸ்தவ கீர்த்தனைகளில் மிக முக்கியமானவை என்று கருகிறேன். வழிபாடு மூலம் எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடைய மக்களிடம் அவரது பாடல் துருப்புச்சீட்டாக இருந்தது.

நொண்டி முடம் கூன் குருடு
நோய்களெல்லாம் தீர்ந்திடவே
அண்டி வந்த அனைவருக்கும்
அருள் வழங்கும் அன்னையம்மா…
என்று குழந்தை ராஜன் எழுதிய வரிகள் அவர்களுக்கு ஆறுதல் அளித்தன. குழந்தை ராஜன் எழுதிய ஒவ்வொரு பாடலும் திரைப்பட பாடல்களுக்கு நிகரானவை. அவர் எழுதிய பாடல்களின் பட்டியலைத் தந்தால் அவர் தான் இந்த பாடலை எழுதினார் என்பது பலருக்குத் தெரியாது. அவர் இயற்றிய சில பாடல்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், சிலவற்றில் பாடலை எழுதியதாக வேறு நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வடிவேல் முருகன், ஸ்ரீகிருஷ்ண கானம்,ஸ்ரீசுப்ரமணிய கானங்கள் என எத்தனையோ இசை ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால், கிறிஸ்தவ இசை ஆல்பங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். திரைப்படத்துறையில் புகழ் பெற்று விளங்கியவர்களை வைத்தே அவர் பாடல்களை பதிவு செய்துள்ளார். அப்படி செய்ததால் என்னவோ அப்பாடல்கள் அனைத்தும் காலம் கடந்தும் பேசப்படுகின்றன. கே.ஜே.யேசுதாசும், வாணி ஜெயராமும் இணைந்து போட்டி போட்டு பாடும் ஒரு பாடலை குழந்தை ராஜன் எழுதியுள்ளார். அவர் எழுதிய ஒவ்வொரு வரியிலும் தமிழ் மணக்கிறது.
அன்னையே ஆரோக்கிய அன்னையே
அழகுள்ள வேளையில்
ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே..
என்று துவங்கும் இந்த பாடலில் ஒரு வரியை வாணி பாட, மறு வரியை யேசுதாஸ் பாடும் வகையில் மெல்லிசை மன்னர் மெட்டமைத்துள்ளார்.

கடலின் அலைகள் காவியம் பாடும்
கார்முகில் கூட்டம் கருணையைக் கூறும்
மடல்விரி தாழையும் மணமது வீசும்
மாதா உந்தன் மகிமையைச் சொல்லும்… ( அன்னையே)
பன்னிரு விண்மீன் முடியினைக் கொண்டாய்
பாதத்திற் கணியாய் நிலவினைப் பதித்தாய்
உன்னிரு கரங்களில் உலகத்தின் ஒளியாம்
உத்தமர் இயேசு பாலனைக் கொண்டாய்
இவ்வளவு அற்புதமான பாடலை எழுதியவர் குழந்தை ராஜன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். கிறிஸ்தவ இசை நிகழ்ச்சிகளில் கே.ஜே.யேசுதாஸ் குரல்களில் பாடுபவர்களின் பேவரைட் பாடல் ஒன்றை குழந்தை ராஜன் எழுதியுள்ளார். அந்த பாடல்,

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே…
குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே!
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே….
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே.
இருளே நீங்க இறைவனை ஏந்தி
இன்னருள் தருவாளே- மாதா
இன்னருள் தருவாளே.
இந்த பாடலில் லே, ளே என்ற சொற்களுக்குப் பின் யேசுதாஸ் கொடுக்கும் ஆலாபனையும், இசையும் கேட்போரை மெய்மறக்கச் செய்யும். அம்மன் பாடல்கள் என்றாலே அதிரும் பம்பை, உடுக்கை சத்தத்திற்கு கொஞ்சும் குறைவில்லாமல் பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி, டேப் ராதாமாணிக்கத்துடன் இணைந்து சில கிறிஸ்தவ பாடல்களையும் பாடியுள்ளார். குழந்தை ராஜன் எழுதிய அற்புதமான பாடலை அவர் பாடியுள்ளார்.

தாயின் மடிதான் உலகம்
அவள் தாளைப் பணிந்திடுவோம்…
அவள் சேயின் மடிதான் மோட்சம்
நம் சேசுவைத் தொழுதிடுவோம்…
அமைதி தவழும் வகையில் அமைக்கப்பட்ட மெட்டிற்கு தகுந்தவாறு எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய இந்த பாடலுக்கு இசை வழங்கியவர் மெல்லிசை மன்னர் தான். மேலும் எம்.லூயிஸ் இசையில் குழந்தை ராஜன் புகழ்பெற்ற பக்தி பாடல்களை எழுதியுள்ளார். அதில் குறிப்பாக எஸ்.ஜானகி பாடிய
வேளாங்கண்ணி மரியாயே
எனக்கு வேண்டும் வரம் தருவாயே..
தாளாச்சுமையால் தளர்ந்து போனேன்
மீளாத்துயரம் அடைந்தேனே
பஞ்சம் பசியால் பரிதாபம்
நான் அடைந்தேனே
பாவச்சுமையால் வேதனை
நான் அடைந்தேனே…
நெஞ்சத்தில் உந்தன் நினைவாக…
நித்தமும் உன் பாதம் அடைந்தேனே
பாடல் புகழ் பெற்றது. பி.சுசீலா பாடிய அன்னை வாழும் திருநகராம், அன்னையவள் காட்சி தந்த அற்புத பூமியிது ஆகிய பாடல்களையும் குழந்தை ராஜன் எழுதியுள்ளார். இத்தனை பாடல்களையும் நினைவூட்டிய புதூர் மாரி, திடீரென காணாமல் போனார். அவர் என்ன ஆனார் என்பது தெரியாமலே போனது.
– ப.கவிதா குமார் ( நினைவுகள் சுழலும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்




சார் உங்களது இந்த வார கட்டுரையை படிக்க இப்போதுதான் நேரம் கிடைத்தது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!
பழைய நினைவுகளின் நதிமூலத்தைத் தேடிப் பயணிக்கும் தங்களின் இந்த ஆக்கம், வெறும் நினைவலைகள் மட்டுமல்ல; அது காலத்தின் சுவடுகளை ஆவணப்படுத்திய ஒரு மிகச்சிறந்த இலக்கியப் பதிவு.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு புதூர் பேருந்து நிலையத்தில் கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் வாழ்ந்த ‘மாரி’ என்ற மனிதரை, அவரது தனித்துவமான ஆங்கிலப் புலமையை, அவர் மீதான ஊரின் பார்வையை அப்படியே கண்முன்னே கொண்டு வந்திருப்பது அற்புதம். மாரி என்ற விளிம்புநிலை மனிதரின் நினைவுகளோடு கட்டுரையைத் தொடங்கி, மீண்டும் அவரோடே முடித்திருப்பது வாசிப்பவர்களின் மனதை கனக்கச் செய்கிறது.
‘அலைகடலின் ஓசையிலே…’ என்ற அமரத்துவமிக்க பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதினார் என்ற பொதுவான வரலாற்றுப் பிழையை மென்மையாகச் சுட்டிக்காட்டி, அதை எழுதியவர் ‘குழந்தை ராஜன்’ என்ற உண்மையை உலகிற்கு உரக்கச் சொன்ன விதம் மிக முக்கியமானது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை ஆல்பங்கள், கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம், பி.சுசீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி போன்ற ஆளுமைகளின் பங்களிப்பு மற்றும் குழந்தை ராஜன் அவர்களின் எளிய, ஆழமான தமிழ் வரிகளை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விவரித்திருப்பது இசைப்பிரியர்களுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்.
தொலைந்து போன பால்ய காலத்து மனிதர்களையும், காலத்தால் மறக்கடிக்கப்பட்ட ஓர் உன்னதக் கலைஞனின் படைப்புகளையும் தேடிக் கண்டுபிடித்து எங்களின் நினைவுக் கதவுகளைத் தட்டிய தங்களின் எழுத்துப் பணி தொடரட்டும்.
தங்களின் எழுத்தாற்றலுக்கும் தேடலுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
தொடர்ந்து கட்டுகளைப் படித்து நீங்கள் அளிக்கும் உற்சாகத்திற்கு மிக்க நன்றி ஸார்.