
தமிழ்நாட்டில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் அதிகளவில் ஊடுருவியதற்கு முந்தைய திமுக அரசுதான் முக்கியக் காரணம் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் பூபாலன் வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சோதனை நடத்தியது. அப்போது இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பூபாலன் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் அதிகளவில் ஊடுருவியதற்கு முந்தைய திமுக அரசுதான் முக்கியக் காரணம். ஜாபர் சாதிக் என்பவர் வந்த பிறகே தமிழ்நாட்டில் மெத்தம்பெட்டமைன் புழக்கம் அதிகரித்தது. போதைப்பொருள் விவகாரத்தில் ஈடுபடுபவர்கள் எந்தக் கட்சியினராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே திமுக ஆட்சியாக இருந்திருந்தால், மெத்தம்பெட்டமைனைக் கோலப்பொடி என்று கூறி வழக்கை முடித்திருப்பார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். அதிமுகவின் சொத்துகளை திமுகவிடம் அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். முதலமைச்சராக விஜய்யை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. திமுகவுடன் கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் அவரது முடிவை அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள ஒரு செங்கல் கூட ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தில் தொடர்ந்து இடைத்தேர்தல்கள் வருவதற்குக் காரணமே எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைதான் காரணம்” என்று கூறினார்.



