டாஸ்மாக் முறைகேடு வழக்கு… செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன்!

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் முன் ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 31)விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

அப்போது அவர், ” அமலாக்க துறையின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஜூலை மாதத்தில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் குறிப்பிடும் சம்பவங்கள் 2021 முதல் 2025 காலகட்டத்தை சேர்ந்தவை. 2025-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அமலாக்க துறையால் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் ஜூலை 28-ம் தேதி முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது ” என்று தெரிவித்தார்.

அப்போது தலைமை நீதிபதி, மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமாரிடம், ”இந்த வழக்கு ஆவணங்கள் சார்ந்த ஆதாரங்களை மட்டுமே கொண்டது என்பதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அவர், ” இந்த சம்பவங்கள் எல்லாம் 2021 முதல் 2025 வரை நடந்த சம்பவங்கள் பற்றியதுதான். அப்போது அவர் அமைச்சராக இருந்ததால் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய விடாமல் தடுத்துவிட்டார்” என்று கூறினார். அத்துடன் ” இது ஒரு தீவிரமான ஊழல் வழக்கு என்பதால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று கேட்டுக்கொண்டார்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மாநில அரசு தனது பதிலை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்ததுடன் செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர். அதேசமயம் செந்தில் பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளையும், ஆதாரங்களையும் பாதிக்கும் வகையிலான செயலில் ஈடுபடக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.மேலும் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியத்தை மாநில அரசு நிரூபித்தால் இந்த உத்தரவில் மாற்றம் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *