
ஆகாஷ்வாணி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்திய கூட்டணியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்.பிக்கள் பங்கேற்ற பேரணி டெல்லியில் நேற்று நடைபெற்றது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சுமார் 300 பேர் பங்கேற்றனர்.
அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவுக்கு அவர்கள் பேரணியாகச் சென்றனர். அகில இந்திய வானொலி நிலையம் (ஆகாஷ்வாணி) அருகில் போலீஸார் தடுப்புகளை அமைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள், தலைவர்கள், தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தடுப்புகளின் மீது ஏறி கோஷமிட்டனர். பின்னர் அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அத்துமீறி நுழைந்தது தொடர்பாக ஆகாஷ்வாணி ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 10 எம்.பிக்கள் மற்றும் பலர் மீது டெல்லி போலீஸார் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒருபுறம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மறுபுறம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோர் சேர்ந்து தீட்டிய வாக்குத் திருட்டு சதியை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுதியான ஆதாரங்களுடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். அதிகார மமதை கொண்ட ஆட்சியாளர்களின் தூண்டுதலால் வாக்காளர் பட்டியலில் இருந்து அநீதியான முறையில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, அவர்களின் அரசியலமைப்பு ரீதியிலான வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இந்த அநீதியை நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சத்தியாகிரப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், டெல்லி காவல் துறை அவர் மீதும், பிற தலைவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்



