
திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக்குடன், தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 5) நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நவல்பட்டு விஜி, விக்னேஷ், கதிரவன், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. முதலில் அமைச்சர் ரமேஷ் குத்துவிளக்கு ஏற்றினார். அவரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் குத்துவிளக்கு ஏற்றினார். இதன் பின் சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், விக்னேஷ் ஆகியோர் குத்து விளக்கை ஏற்றினர். அடுத்து குத்து விளக்கு ஏற்ற திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் என்கிற நவல்பட்டு விஜி முன்னே வந்தார்.
ஆனால், மெழுகுவர்த்தியை அங்கிருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக்கிடம் கொடுத்தனர். இதனால் கோபமடைந்த நவல்பட்டு விஜி, காங்கிரஸ் எம்பி.யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மெழுகுவர்த்தியை கிறிஸ்டோபர் திலக், விஜியிடம் தந்தார். அப்போது அதை வாங்கி கீழே தட்டி விட்டார். மேலும், “நான் ஏற்ற வேண்டாமா? என்னை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? புரோட்டாக்கால் தெரியாதா?” என அமைச்சர் ரமேஷை பார்த்து நவல்பட்டு விஜி கேள்வி எழுப்பினார். இதையடுத்து அமைச்சர் ரமேஷ் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தினார். இதன் பின்னர் நவல்பட்டு விஜி குத்துவிளக்கு ஏற்றினார். பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.பியுடன் தவெக எம்எல்ஏ மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



