வடகிழக்குப் பருவமழை: அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முதலமைச்சர் விஜய் அமைச்சர்கள்மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல் குமார், வினோத், ஸ்ரீநாத், அருண்ராஜ் மற்றும் துறை சார்ந்த் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி பேசுகையில்,
“கடல் நீர் உட்புகுதல், கடல் அரிப்பு மற்றும் வெள்ளப்பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள்கண்டறியப்பட வேண்டும். அத்துடன் பாதிப்புக்குள்ளாகக்கூடிய கடலோரக் கிராமங்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் விவரங்கள் தயாராக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், மீனவர்களுக்கு வானிலை மற்றும் கடல் எச்சரிக்கைகள் உரிய நேரத்தில் சென்றடைவதையும், வெள்ளப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான திட்டத்தையும், புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் பயன்பாட்டிற்குத் தயாராக இருப்பதையும் உறுதிசெய்திட வேண்டும்.

அத்துடன், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் தேவைக்கேற்ப நிவாரண முகாம்களாக பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்திட வேண்டும். நிவாரண முகாம்களில் குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், மாவட்ட அளவில் அவசரகால மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதையும், படகுகள், உயிர்காக்கும் மிதவைகள், கயிறுகள், மின்உற்பத்தி இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் போன்றவையும் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்திட வேண்டும்.

பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் பிற எச்சரிக்கை வழிமுறைகள் மூலம் தகவல் வழங்கப்படுவதையும், செயற்கைக்கோள் தொலைபேசி உள்ளிட்ட அவசரகால தகவல் தொடர்பு சாதனங்கள் செயல்படும் நிலையில் தயாராக உள்ளதா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். சேமிப்புக் கிடங்குகளில் இருப்பில் வைத்திருக்கும் நெல் மூட்டைகள் மழைநீரால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், சாலைகள், மழைநீர் வடிகால்கள், பாலங்கள் ஆகியவற்றை டிரோன் மூலமாக ஆய்வு செய்து, பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பருவமழைக் காலங்களில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுவதுடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் நிலவரம் குறித்து மாநில அளவில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, எல்-நினோ எனும் காலநிலை மாற்ற நிகழ்வு பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவின் முதற்கட்ட ஆய்வறிக்கையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் வழங்கினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *