
தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசியதாக வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அவர் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (அக்டோபர் 6) நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் வீடியோகி வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், “கடந்த முறை ரூ. 31 கோடி செலவு செய்திருக்கிறேன். ஆனால், ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை. அந்த மாதிரி இருந்துவிட்டு இந்த நாய்கள்கூட சேருவது என்பது என்னால் சத்தியமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அமைச்சர்கள் தங்குவதற்கு அறைகள் (ரிசார்ட்) பதிவு செய்ததற்கு மட்டும் ரூ. 14 லட்சம் செலவு செய்திருக்கிறோம். நம்மலும் ஒரு கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு வந்திருக்கிறோம். அதனால் முடியாது என்று சொல்ல முடியாது. மேலும், கூட்டணி கட்சியினரும் விமானத்தில் வருவதற்காக டிக்கெட் செலவுகளும் இருக்கின்றன” என்று காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், இந்த வீடியோவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆஸ்டின் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக 40 லட்ச ரூபாய் வரை செலவு செய்ய முடியும். தற்கு மீறி செலவு செய்தால் அவர் தகுதி நீக்க செய்யப்பட வேண்டும். அத்துடன் 3 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. அதிகபட்சமாக 6 மாத காலம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் விதிமுறை.
இதன்அடிப்படையில் 14 லட்ச ரூபாய் செலவு செய்ததாக சத்தியபாமா கூறியிருப்பது உண்மையானால் அந்த பணம் கணக்கில் வராமல் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளோம். மேலும் தவெக சார்பில் காமாட்சி விளக்கும், புடவையும் சத்தியபாமா படத்துடன் வீடு வீடாக சென்று கொடுத்துள்ளனர். தவெக சார்பில் பணம் கொடுத்ததாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகமும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்யபாமா வீடியோவில், பேசியதை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த தேர்தலில், பிரசாரத்திற்காக வருகை தந்த அமைச்சர்களுக்கும், கட்சி முக்கியஸ்தர்களுக்காகவும் ‘மல்லி ரிசார்ட்’ என்ற ஓட்டலில் அறை ஒதுக்குவதற்காக கிட்டத்தட்ட 14 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கூறியிருக்கிறார். தோட மேலும் பல தொகைகளை செலவு செய்ததாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ல் , பிரிவு 77 தெளிவாகச் சொல்கிறது. ஒரு வேட்பாளர் தேர்தல் செலவுக்காக 40 லட்சம் ரூபாய் தான் செலவு செய்ய வேண்டும். அத்துடன் வேட்பாளர், தேர்தலுக்காகும் செலவை கணக்கு காட்ட வேண்டும். இதற்கென தனியாக ரெஜிஸ்டர் போட்டு இருக்கிறார்கள். இந்த ரிஜிஸ்டரில் தேர்தல் கணக்கைப் பதிவு செய்து அப்சர்வராக வரக்கூடியவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்து ரிட்டர்னிங் ஆபீஸரிடம் வழங்க வேண்டும்.
இதிலும் பணமாக எதுவும் செலவு செய்யக்கூடாது. வேட்பாளருக்கு என தனி ஒரு கரண்ட் வங்கி கணக்கு உருவாக்கப்பட்டு அதன் மூலம் காசோலையாகத்தான் கொடுக்க வேண்டும். தேர்தல் செலவு மேற்பார்வை செய்யக்கூடிய அதிகாரியிடம் காசோலையை ஒப்படைத்து ரிஜிஸ்டரில் பதிவு செய்ய வேண்டும். அதில் வேட்பாளர் கையெழுத்திட வேண்டும் அல்லது அவரது முதன்மை முகவர் கையெழுத்திட வேண்டும். ஆனால், அறை ஒதுக்கீடு செய்வதற்கு மட்டும் 14 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறேன் என்று சத்யபாமா கூறியிருக்கிறார். இது தொடர்பாக நாங்கள் தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறோம்.
அதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு, இந்த தேர்தல் கணக்கில் 14 லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டிருக்கிறதா. அந்த ரிஜிஸ்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா. அதில் வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ கையெழுத்து போட்டிருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமின்றி அந்த வங்கி கணக்கின் ஸ்டேட்மென்ட்டை எடுக்க சொல்லி, அதில் இந்த பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்கிறதா? யாருக்காவது காசோலையாக கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்க்க சொல்லி இருக்கிறோம். எனவே, இந்த வங்கி கணக்கில் வரவில்லை என்றாலும், தேர்தல் கணக்கு ரிஜிஸ்டரில் பதிவாகவில்லை என்றாலும் உடனடியாக சத்யபாமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
விதிப்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒரு வேட்பாளர் செலவு செய்திருக்கிறார் என்று சொன்னால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இந்திய தண்டனைச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, 14 லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறேன் என்று வாக்குமூலமாக சொல்லி இருப்பதை வைத்து, ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்” என்றார்.



