
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், ஹெச். வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்தார். அவரின் கடைசிப்படம் இதுவென்பதால் தவெக மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ‘ஜனநாயகன்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தணிக்கை வாரியம் படத்தை மறு ஆய்வு குழுவிற்கு அனுப்பியது.
இதனையடுத்து ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்தது படக்குழுவையும், விஜய்யின் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.இந்த நிலையில் ஜூலை முதல் வாரம் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஜூலை 23-ம் தேதி படம் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் 322.80 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரபல ஓடிடி நிறுவனம் ஜி 5 (Zee 5) தமிழ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில்,, “தங்கமே தளபதி, ‘ஜனநாயகன்’ ஆகஸ்ட் 21-ம் தேதி ஓடிடியில் உங்களை சந்திக்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், விஜய் காரில் சட்டசபைக்கு ஜீப்பில் செல்வது போன்றும், அப்போது அவர் நடித்த படங்களின் கதாபாத்திரங்கள் தோன்றுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.



