
தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் கதி என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற பிறகு மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. முன்னறிவிப்பின்றி ஏற்படும் இந்த தடையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், பெ.விஸ்வநாதன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் உள்பட பலர் பங்கேற்ற கூட்டங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழ்நாட்டில் நிலவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என்றும், காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததாலும், கோடைக்காலம் நீடிப்பாலும் மின்நுகர்வு அதிகமாகியுள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறி வருகிறார். வெளிச்சந்தையில் தேவைக்கேற்ப மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பராமரிப்பு காரணம், டிரான்ஸ்பர்மர் பழுது போன்றவால் தான் மின் தடை ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்னபாக தமிழ்நாடு முதலமைச்சர் மின்வாரியத் தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அமைச்சர் பேசும்போது மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசிக் கொண்டிருக்கும்போது, சில விநாடிகள் மின்தடை ஏற்பட்டது. இதற்கு ஜெனரேட்டர் மாற்றம் காரணமாக 5 விநாடிகள் மின்தடை ஏற்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ தவெக ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல” தெரிவிக்கப்பட்டுள்ளது.



