தவெக ஆட்சியே குதிரை பேர ஆட்சி தான்: பகீர் கிளப்பும் பரந்தாமன்

தவெக ஆட்சியே ஒரு குதிரை பேர ஆட்சிதான் என்று பரந்தாமன் கூறியுள்ளார்.

மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்காக பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்போது, திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவோடு வாக்கெடுப்பில் தவெக வெற்றி பெற்றது. திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் டி.எம்.ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ எம்.பி ஆகியோர் தங்களை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டும் எனக் கூறி, குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கடந்த 1-ம் தேதி புகார் அளித்துள்ளனர்.

இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இடைத்தேர்தலில் நிற்கக்கூடிய செலவுகள் அனைத்தையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று முதலமைச்சர் சொல்லச் சொன்னார் என ஆதவ் அர்ஜுனா வைகோவிடம் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் இடம் கொடுப்பதாகக் கூறியுள்ளனர் என்று கூறி, இருவரையும் ராஜினாமா செய்ய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களிடமும் வைகோ பேசியுள்ளார். மேலும், உங்களைப் பொருளாதார ரீதியில் பார்த்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியிருப்பதாக வைகோ இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி இரண்டு முறை புகார் கொடுத்துள்ளார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் 1-ம்தேதி எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதனைப் பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை காவல் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆட்சியே ஒரு குதிரை பேர ஆட்சிதான். மாற்றுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, இடைத்தேர்தலில் தங்களது கட்சியில் போட்டியிட வைத்து, தன் கட்சிக்கு பலத்தைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் விஜய்யின் எண்ணம். முதலமைச்சர் விஜய் நாற்காலியின் நான்கு கால்களும் ஊழலின் கால்கள் தான்.

குதிரை பேரம் தொடர்பாக அதிமுகவும் புகார் கொடுத்துள்ளது. அதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் திமுக போராட்டத்தை முன்னெடுக்கும். ஜெயலலிதா ஊழல்வாதி என்பதை திமுகதான் நிரூபித்தது. தேர்தல் முடிந்த உடனேயே மீண்டும் மீண்டும் இடைத்தேர்தலைக் கொண்டு வருவது தவறு. இப்படிப்பட்ட ராஜினாமாக்களை ஆதரிக்கக் கூடாது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பணி காவல்துறைக்கும் இருக்கிறது. எனவே, அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்கக் கூடாது. முதலமைச்சர் விஜயை A1 குற்றவாளியாகப் பதிவு செய்ய வேண்டும்.
இது தொடர்பாக ஜூலை 1 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் ஆளுநரிடம் இரண்டு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *