
புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கையாக ராமநாதபுரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது. இது தென்கிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது தெற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று மேலும் வலுப்பெற்று மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் நாளை (அக்.27) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது.
சுமார் 3.1 கிமீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியிலிருந்து வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (அக்.26) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
புயல் மற்றும் கனமழை அறிவிப்பால் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாட்டில் ராமநாதபுரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (அக்.26) மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வட்டங்களில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் தொடர் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேனி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



