
ஒளிப்பதிவாளர் இரா.செழியன் மறைவு தமிழ் கலையுலகுக்கே ஏற்பட்டப் பேரிழப்பு என சீமான் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செழியன், கட்டுமானத் துறைப் பொறியியல் படிப்பை முடித்தார். அதன்பிறகு ஒளிப்பதிவில் மீது கொண்ட ஆர்வத்தால், பிரபல ஒளிப்பதிவாளர், பி. சி. ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக தன் திரை வாழ்க்கையை தொடங்கினார். அவரிடம் திறன் பட பணியாற்றிய பல்வேறு ஒளிப்பதிவு நுணுக்கங்களை கற்றது மட்டுமின்றி, சீமான் இயக்கிய தம்பி திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
கடந்த 2007-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான ’கல்லூரி’ திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக செழியன் அறிமுகமானார். இதன் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவக்காற்று, ரெட்டச்சுழி உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். 2013- ம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தின் மூலம் பிரபல ஒளிப்பதிவாளராக மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். இப்படத்திற்காக லண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பெற்றார். அதன்பிறகு பாலா இயக்கிய ’தாரை தப்பட்டை’ படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரது ஆவணப் படங்களை தயாரித்துள்ளார். பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு செழியன் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய டூலெட் படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்றார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செழியன்
சென்னை தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை 5 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 57.
இந்த நிலையில் , இரா.செழியன் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,, “முன்னணி ஒளிப்பதிவாளரும், தேசிய விருதுபெற்ற இயக்குநருமான தம்பி இரா.செழியன் அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் தனது கலைப்பணிகள் மூலமாக மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டுதானிருப்பார்.
தமிழ்த்திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரும், தலைசிறந்த இயக்குநருமான என் ஆருயிர் இளவல் இரா.செழியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும் அவரது மனைவி பிரேமா, உடன்பிறந்த சகோதரர்களான தம்பிகள் இளங்கோ, சரவணன் ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலகினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் என் மீது பேரன்பு கொண்டிருந்தவர் தம்பி செழியன். என்னுடைய ‘தம்பி’ திரைப்படத்தின் ஆக்கத்துக்கும், வெற்றிக்கும் பெரும் உழைப்பைச் செலுத்தினார். தமிழ்த்தேசியம் குறித்தும், நாம் தமிழர் கட்சி குறித்தும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த தம்பி செழியன், நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறைக்குப் பெரும் பங்காற்றியவராவார். எப்போதும் என்னோடு அன்பொழுகப் பழகும் என்னுடைய அன்புத்தம்பி செழியன் அவர்களை இனி எப்போதும் காணவே முடியாது என்பதை உள்ளம் ஏற்க மறுக்கிறது.
அவரது மறைவுச்செய்தி என்னை முற்றாக நிலைகுலையச் செய்திருக்கிறது. தமிழ்த்திரையுலகின் கலை ஆளுமை என்னுடைய தம்பி செழியன் அவர்களின் நல்லுடல் கலையுலகத்தினர் மற்றும் பொதுமக்கள் இறுதி வணக்கம் செலுத்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் வைக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த கலைஞனான தம்பிக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.



