1 யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு கொள்முதலில் ஊழல் முறைகேடு: செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 கொள்முதல் செய்வதற்கு ஊழல் முறைகேடுகளே காரணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் இன்று(அக்.13) கூறுகையில்,“ அன்று எதிர்க்கட்சியாக இருந்த போது அதிக விலைக்கு கரண்ட் வாங்க டெண்டர் விடுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்த தவெக தலைவர், இன்று முதலமைச்சரான பிறகு அதே தவறைச் செய்து வருகிறார். இன்று தமிழ்நாட்டில் மின்வெட்டு பற்றிப் பேசாத நாட்களோ, செய்திகள் வராத நாட்களோ ஒரு நாளும் இல்லை. அரசு நிகழ்ச்சிகள், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா மற்றும் நீதிபதிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில்கூட மின்வெட்டு ஏற்படுகிறது.

இதற்கு மின்வாரியம் ஒரு விளக்கம் அளிக்கிறது. ஆனால், சிறிது நேரத்தில் அமைச்சர்கள் மாற்று விளக்கம் சொல்கிறார்கள். பிறகு மின்சார வாரியத்தின் விளக்கம் வாபஸ் பெறப்படுகிறது. உச்சபட்சமாகத் தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு நடக்கும் அளவிற்குத் தவெக அரசு மிக மோசமான நிர்வாகச் சூழலில் சிக்கியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சரோ, தனது துறை சார்ந்த கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் திணறி வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்று 5 மாதங்களாகியும் மின்வெட்டுப் பிரச்னைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் மின் தேவை சீராக அதிகரித்து வந்தது. திமுக ஆட்சியில் அதிகபட்ச மின் தேவை என்பது 16,000 மெகாவாட்டில் இருந்து 20,830 மெகாவாட் அளவிற்கு அதிகரித்தது. அந்த 5 ஆண்டுகளில் 4,349 மெகாவாட் மின்சாரம் தேவை அதிகரித்தது. ஒரு வருடம் சராசரியாக 1000 மெகாவாட், 1,500 மெகாவாட் இப்படி கூடுதலாக அதிகரிக்கப்பட்டு 4,349 மெகாவாட் அளவுக்கு இந்த ஐந்து ஆண்டுகளில் கூடுதல் மின் தேவை ஏற்பட்டன. இப்படி ஆண்டுதோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மெகாவாட் மின் தேவை ஏற்பட்டாலும் கூட எந்தவித தடையும் இல்லாமல் சீரான மின் விநியோகம் செய்த அரசு, திராவிட மாடல் அரசு; அதை வழிநடத்தியவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இன்றைய அரசு இந்த ஐந்து மாத காலத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. பொதுவாக நாங்கள் ஆட்சியில இருக்கும்போது 2021-ல் இன்றைய மின் துறை அமைச்சர் ஒரு பதிவு அன்னைக்குப் போட்டிருக்கிறார். அதில் ‘20 ரூபாய்க்கு மின்சார கொள்முதல் செய்கிறார்கள், ரிசைன் ஈ.பி. மினிஸ்டர்’ என்று ஒரு பதிவை போட்டிருக்கிறார். 2021-ல் இன்றைய மின் துறை அமைச்சர் அன்னைக்கு அரசியல் கட்சியினுடைய நிர்வாகியாக இருந்து, 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்றதுக்காக மின் துறை அமைச்சர் ரிசைன் செய்ய சொல்லி இருந்தார். இன்னைக்கு 35 ரூபாய்க்கு இன்றைய தவெக அரசு மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது.அதுவும் ஆந்திராவில் இருந்து என்கிறார்கள்.

குறிப்பாக நாங்கள் அதிகபட்சம் 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்ற பொழுது என்ன சூழல் என்றால் பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிக உச்சபட்ச மின்சார தேவை ஏற்படும். இதனால் முன்னேற்பாடாக நவம்பர், டிசம்பர் மாசத்திலேயே நாங்க டெண்டர் போடுவதற்கான பணிகளை முன்னெடுப்போம். குறிப்பாக பொங்கலுக்கு முன்பாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

தவெக ஆட்சியில் சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் 35 சதவீதம் தான் உற்பத்தி செய்கிறது. சொந்த உற்பத்தியை குறைத்து, வெளிச்சந்தையில் கொள்முதல் செய்கிறார்கள்.வேறு மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் அதிக தொகைக்கு மின்சாரத்தை விற்பதால், அந்தந்த மாநில அரசுகளே வாங்காத நிலையில், தமிழ்நாடு அரசு வாங்குகிறது.
திமுக ஆட்சியில் உபரியாக இருந்த 8,600 யூனிட் மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்தளவுக்கு மின்சார வாரியத்தின் நிலை உயர்ந்திருந்தது. மேலும் தவெக ஆட்சியில் மின்சார வாரியம் முழுக்க முழுக்க முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறது. சொந்த மின் உற்பத்தியைக் குறைத்து, வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 கொள்முதல் செய்வதற்கு ஊழல் முறைகேடுகளே காரணம்” என்றார் செந்தில் பாலாஜி.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *