
தவெக அமைச்சரவையில் பாமக பங்கேற்கிறதா என்பது குறித்து சௌமியா அன்புமணி விளக்கமளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாமக சட்டமன்றக்குழு தலைவர் சௌமியா அன்புமணி இன்று(அக்.3) சாமி தரிசனம் செய்தனர். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாடு அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், மகளிர் வெற்றிப்பயணத் திட்டம் என தவெக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. அரசின் இந்த திட்டங்கள் எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின்பே தெரிய வரும்.
கூட்டுறவு வங்கி சங்கங்களில் கடன்தொகை வசூலிக்கப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தவெக கூட்டணியில் பாமக இடம் பெறுவதும், அமைச்சரவையில் இடம்பெறுவதும் வதந்தி மட்டுமே.
தமிழ்நாட்டில் மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். 8 வயது சிறுவர்கள் முதல் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார்கள். தமிழ்நாடு அரசின் வருமானத்திற்கு அரசு மாற்று வழி ஏற்படுத்த வேண்டும்” என்றார்.



