காரல் மார்க்ஸ் சரிதம்- 10

(நொண்டிச் சிந்து)

1)கொடும்முத லாளித்துவம்- இந்தக்
குவலயம் தன்னில் பவனிவர
ஒடுங்கிய வர்க்கமொன்று- தன்
உழைப்பினை விற்றுப் பிழைக்கணுமே!

2)கூடிச் செயல்படுமே!- மூலதனம்
கூலி உழைப்புடன் ஆலையிலே!
நாடி முரண்படுமே!- வர்க்க
நலனென வருகையில் உலகினிலே!

3)இழந்திட ஏதுமில்லை- இங்கே
எளியவர் கரங்களில் விலங்கையன்றி
சுழலும்இவ் வுலகமுண்டு- துன்பம்
சுமந்திடும் பாட்டாளி தமக்கிங்கு

4)வருக்க முரண்களையே- பாட்டாளி
வருக்க அரசுகள் அறுப்பதனால்
இருக்கிற தேவையினை- இழந்து
சருகென உதிர்ந்திடும் அரசுகளே!

5)சந்தைகள் விரிந்திடணும்- மூலதனம்
சகத்தினில் தொடர்ந்து சுகம்பெறவே
எங்கேயும் கூடுகட்டும்- லாபம்
இருந்திடும் என்பது உறுதியெனில்

6)வேலைப் பகுப்புகளும்- இயந்திரம்
வேலைகள் செய்திடும் ஆலைகளும்
ஆளுமை தனைஉழைப்போர்- இழக்கும்
அவலத்தைக் கொணர்ந்தன குவலையத்தில்

    பிப்ரவரி 1848 புரட்சிகள்

7)பிரஞ்சுப் புரட்சியினால்- ஐரோப்பாவில்
பெருகின பெருநகர் அருந்தொழில்கள்
பெருகி தொழில்களினால்!- நகர்களில்
பெரிதும் சனத்தொகை பெருகியதே!

8)நிலப்போர் பெருக்கத்துடன்- விறகு
நிர்வாகச் சட்டத்தின்* உருவாக்கமும்
அளவற்ற வரிச்சிமையும்- புரட்சிகள்
ஆங்காங்கு தோன்றிடத் தூண்டினவே

9)பிப்ரவரி மாதத்திலே- தோன்றியது
பிரான்ஸெனும் தேசத்தில் புரட்சியொன்று
அப்புறப் ஐரோப்பாவை- புரட்சிகள்
ஆட்டிப் படைத்தன காட்டுத்தீயாய்

10)அம்மாவின் மூலம்வந்த- தனது
அத்தனை சொத்தையும் அறிஞன்மார்க்ஸும்
சும்மாவே தந்துவிட்டான்- ஆயுதம்
சொந்தமாய்ப் புரட்சிக்கு வாங்கிடவே!

*(பொதுமக்கள் காடுகளுக்குள் சென்று விறகு சேகரிப்பது, கால்நடைகளை மேய்ப்பது மற்றும் மரங்களை வெட்டுவது போன்ற பாரம்பரிய உரிமைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டன)
– மனோந்திரா (தொடரும்)

இந்த கவிதைத் தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *