காரல் மார்க்ஸ் சரிதம்- 11

                (இயற்கும்மி)

1)பிரசெல்ஸை விட்டு வெளியேறச் சொன்னது
பெல்ஜிய ராஜியம் காரல்மார்க்ஸை
புரட்சியைத் தானவன் தூண்டு கிறானென்ற
பொல்லாத காரணம் ஒன்றுசொல்லி

2)நாட்டினை விட்டு வெளியேறும் முன்னமே
ஞானியைச் சட்டெனக் கைதுசெய்தார்
ஆட்டினைக் கொட்டிலில் பூட்டுதற் போலே
அறிஞனை வைத்தார் சிறையினிலே

3)ஜென்னியை யும்கைது செய்து உடனே
சிறையினில் கொண்டு அடைத்தனரே!
மின்ன லெனமறு நாளே அவர்களை
வீட்டிற் கனுப்பியும் விட்டனரே!

4)நாட்டினை விட்டு வெளியேறிப் போகவே
நாழிகை இல்லாமற் போனதனால்
வீட்டுப் பொருட்களைக் கையில் எடுக்காமல்
வேகமாய்ச் சென்றிட நேர்ந்ததையோ!

5)நின்று பயணிக்கக் கூட இடமில்லை
நெட்ட நெடுரயில் வண்டியிலே
சின்னக் குழந்தைக ளோடு பயணத்தைச்
செய்து அடைந்தனர் பாரிஸ்நகர்

6)பாரிஸ் நகருக்கு வந்ததும் போரிலே
பாய்ந்து குதித்தான் அறிஞனவன்
கூரிய சிந்தனை கொண்டு புரட்சிக்கு
கூறினான் நல்ல கருத்துகள்தான்

7)ஜெர்மனி கம்யூனிஸ்ட் தோழர்கள் பாரிசில்
சேர்ந்து இருந்தனர் ஒற்றுமையாய்
பெர்லின் நகரில் புரட்சி நடத்திடப்
பேராசை நெஞ்சினில் கொண்டவராய்!

8)ஜெர்மனி தேசத்தில் பாட்டாளி வர்க்கம்
செழித்து வளர்ந்திட வில்லையென்று
அர்த்தத் துடன்பூர்ஷ்வா வர்க்கப் புரட்சியே
ஆங்கு சரியெனக் கூறினான்மார்க்ஸ்

9)ஏங்கல் ஸுடன்மார்க்ஸும் கொலோன் நகரினில்
ஏப்ரலி லேவந்து தங்கிவிட்டான்
ஆங்கொரு நாளிதழ்* தன்னைத் தொடங்கி
அதற்குத் தலைவனாய் ஆகிவிட்டான்

பிரஷ்யக் குடிமக னாகிடத் தான்பல
பேரிடம் கேட்டும் பயனில்லையே!
சிரமம் பலவந்து தாக்கிய போதிலும்
செய்தித்தாள் வேலை குறையலையே!
(*நியூ ரைநிஷே சைடுங்)
–மனோந்திரா (தொடரும்)

இந்த கவிதைத் தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *