
(அறுசீர் வெண்டளை விருத்தம்)
1)இதழை நடத்தும் பணியில்
இருந்தான் கடுகடு வென்று
அதனால் பணியில் இருந்தோர்
அலறித் துடித்தனர் அன்று
பலமுறை செய்தியைப் பார்ப்பான்
பலமணி நேரம் கரையும்
சுலபமாய்ச் செய்வர் அதையே
சுறுசுறுப் புள்ள எவரும்
2)பூர்ஷுவா வர்க்கப் புரட்சிக்கு
பூரண மாக உதவ
மார்க்ஸும் அறிவுரை சொன்னானே
வாழ்கிற பாட்டாளிக் கன்று
ஏற்றிட வில்லை அதனை
இனிய சினேகிதன் ‘கோட்ஸ்சாக்’
மார்க்ஸும் சினமது கொண்டுதான்
மல்லுக்கு நின்றான் உடனே
3)‘கோலோன் தொழிலாளர் சங்கத்தில்’
‘கோட்ஸ்சாக்’ தலைவனாய் ஆகிக்
கோலோச்சி னான்,அதை ஏற்கும்
குணமின்றிப் போனானே காரல்!
தேளேபோல் வார்த்தைகள் கொண்டே
திட்டினான் கோட்ஸ்சாக்கை அவனும்
தாளாத நோயொன்று கண்டுபின்
தானாகச் செத்தானே கோட்ஸ்சாக்
18494)புரட்சிகள் தோல்வி யடைந்தன
பூர்ஷுவா வர்க்கம் துவண்டது
அரசு அலுவலர் தன்னை
அவமதித் தார்கள் எனச்சொல்லி
சுரத்துகள் இல்லா வழக்கொன்றை
ஜோடித் தனர்மார்க்ஏங் கல்ஸின்மேல்
திறத்துடன் மார்க்ஸ்செய்த வாதத்தால்
சென்றிட வில்லை சிறைக்கவர்
5)தூற்றி வரிகள் விதிப்பதைத்
தூக்கி எறிந்திடச் சொல்லியே
ஆற்றுப் படுத்தினான் மக்களை
ஆங்கு கிளர்ச்சிகள் செய்யவே
மாற்றுக் கருத்துகள் இல்லையே
மார்க்ஸிதைச் செய்ததும் உண்மையே
ஏற்றினர் மார்க்ஸையே கூண்டிலே
எண்ணிநாள் ஒன்றுபோம் முன்னமே
6)இந்த வழக்கிலும் வெற்றியே
ஈட்டினன் காரல், அதனையே
வந்த கலோனல்* வெறுத்தனன்
மார்க்ஸையே நாடு கடத்திடச்
சிந்தனை செய்திடும் முன்னே
சிறிய அலுவலர் ரெண்டுபேர்
வந்தனர் மார்க்ஸைப் பிடிக்கவே
வாளை உருவி மிரட்டியே!
*கலோனல் ப்ஃரடெரிக் ஏங்கல்ஸ்(இவன் வேறொரு ஏங்கல்ஸ்)

7)‘அரசுக் கெதிராகச் செய்தி*
அனுப்பிய ஆளையே சொல்’லென
மிரட்டினர் மார்க்ஸெனும் ஞானியை
மெல்ல மறுத்தனன் காரலும்
மிரண்டனர் வந்த அலுவலர்
மேதை கரங்களைப் பார்த்ததும்
அரண்டனர் துப்பாக்கி ஒன்றை
அறிஞனும் ஏந்திடக் கண்டதும்
*(இராணுவ ஊழல்)
8)இராணுவ வீரர்கள் வந்ததை
இன்றே வெளியிடப் போவதாய்
பிராதொன்று செய்தனன் மார்க்ஸும்
பெரிதும் பயந்தான் கலோனலே!
அராஜகம் அத்துடன் நின்றது
அப்படி எண்ணுதல் தப்பிதம்
வராத துயர்கள் இனித்தானே
வந்திடப் போவது நிச்சயம்i
9)தாமாய்ச் சரணடைந் தார்களே
சங்க உறுப்பினர் யாவரும்
பூமிக் குரியவன் இல்லையே
புத்திமான் மார்க்ஸ்எனச் சொல்லியே
மேமாதம் தேதி பதினாறில்
மேதையை நாடு கடத்தினர்
சீமானாய் வாழ்ந்த அறிஞன்
தெருவிற்கு வந்தான் முடிவினில்
10)சிவப்பு நிறத்தினில் வந்தது
சீர்மிகு செய்தி இதழுமே
சவப்பெட்டிக் குள்ளேதான் போகையில்
சாதனை செய்திட்ட அவ்விதழ்
குவிந்த கடன்களைக் கட்டி
குடும்பத்தை கூட்டியே சென்றிட
அவசர மாகவே விற்றானே!
அத்தனை சாமான் களையுமே
-மனோந்திரா (தொடரும்)
இந்த கவிதைத் தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D லிங்கை கிளிக் செய்யவும்.



