
பிரபல யூடியூபர் ஹரிஷ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவதூறு பரப்பியதாக யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி தொடர்பான வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர் ஹரிஷ். இவர் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய முட்டுக்காடு பகுதியில், நண்பருடன் வாடகை வில்லாவில் தங்கியிருந்தார். இந்த நிலையில், ஹரிஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர், காவல் கட்டுப்பாட்டு அறைக்குதகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து கானத்தூர் காவல்துறையினர் விரைந்து சென்று ஹரிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணையை நடத்தினர். அப்போது ஹரிஷின் சமூக வலைதளக்கணக்குகள் முடக்கப்பட்டதும், அவரைப் பற்றி யூடியூபர் ஜேசன் சாமுவேல் என்பவர் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதால் தங்கள் மகன் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக ஹரிஷின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இதையடுத்து அவதூறு பரப்பியதாக ஜேசன் சாமுவேல் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த ஜேசன் சாமுவேலை போலீஸார் கைது செய்துள்ளனர்.



