மதுபான விடுதியில் பயங்கர தீ விபத்து… பாங்காக்கில் 27 பேர் பலி

பாங்காக்கில் இன்று அதிகாலை மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.

தாய்லாந்து தலைநகரான பாங்க்கின் வடக்குப் பகுதியில் உள்ள ‘நா லாட்பிராவ்’ என்ற மதுபான விடுதியில் இன்று (ஜூலை 13) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மதுபான விடுதியின் முன் பக்க கதவு வழியாக பெரும் தீப்பிழம்புகளும், புகையும் வெளியேறுவதை மீட்புக்குழுவினர் இணையத்தில் பகிர்ந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. அந்த வீடியோ காட்சியில், அடர்த்தியான கரும்புகை வானத்தை நோக்கி எழும்பும் போது, மக்கள் அங்கிருந்து தப்பிக்க முயல்வதை காண முடிகிறது.

இந்த தீ விபத்து குறித்து தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார். ” மின்சாரம் துண்டிக்கப்படுவதற்குமுன்பு மேடைக்கு அருகில் இருந்த மின்சார பாக்ஸில் இருந்து புகை வருவதைக் கண்டதாவும், பின்னர் ஒரு வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அனைத் தொடர்ந்து அடந்த இடம் முழுவதும் அர்த்தியான புகை சூழ்ந்து கொண்டது” என்று மதுபான விடுதியில் இசைநிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த இசைக்கலைஞர் பகிர்ந்து கொண்ட தகவலையும் அனுதின் செய்தியாளர்களிடம் கூறினார்.

விபத்து குறித்து பாங்காக் ஆளுநர் சாட்சார்ட் சிட்டிபுண்ட் கூறுகையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 63 பேரில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களில் பலரிடம் அடையாள அட்டை இல்லை என்றும் அவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

தாய்லாந்தில் கடந்த காலங்களில் இதுபோன்ற துயரச்சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தாய்லாந்தின் தலைநகரில் உள்ள சாண்டிகா இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த தீ விபத்து உள்ளரங்கில் நடத்தப்பட்ட வாணவேடிக்கை நிகழ்ச்சியால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் பின் 2022-ம் ஆண்டின் நாட்டின் கிழக்குப்பகுதியில் ஒரு இசை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *