
இயக்குநர் அனுராக் காஷ்யப்
‘தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ கேவலமான திரைப்படம் என்று பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் குற்றம் சாட்டியுள்ளார்.
மாட்டிறைச்சி அரசியல்
‘தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம், டிரெய்லரில், கடத்தப்பட்ட பெண் ஒருவர் தனக்கு வலுக்கட்டாயமாக வழங்கப்படும் மாட்டிறைச்சி உணவை எட்டி உதைத்து, ‘உயிரே போனாலும் பீஃப் (மாட்டிறைச்சி) சாப்பிட மாட்டேன்’ என்று ஆக்ரோஷமாகப் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரளாவில் மாட்டிறைச்சி அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணப்படும் நிலையில், இந்தக் காட்சி எதார்த்தத்திற்குப் புறம்பாக இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ படத்துக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவ் நம்புதிரி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு படக்குழுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மத்திய தணிக்கை வாரியம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை ( பிப்ரவரி 24) விசாரணைக்கு வர உள்ளது.
பிரிவினையை தூண்டும் படம்
இப்படிப்பட்ட சூழலில் ‘தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரிவினையை தூண்ட பார்க்கிறார்கள் என பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், “இந்தப் படம் முழுக்க முழுக்க பிரச்சார திரைப்படம். தயாரிப்பாளர்கள் படத்தின் கதையின் மீது கவனம் செலுத்தாமல், வெறுமனே பணத்தாசைக்காகவே இப்படி செய்கிறார்கள். அர்த்தமுள்ள கதைகளை உருவாக்குவதற்கு பதிலாக, மக்களிடையே பிரிவினையை தூண்டுவதற்காகவே இப்படியான படங்கள் உருவாக்கப்படுகின்றன.
‘கேரளா ஸ்டோரி’ கேவலமான திரைப்படம். இந்தப் படத்தின் டிரெய்லரில் காட்டப்படுவது போல யாராவது இப்படி மாட்டுக்கறியை ஊட்டுவார்களா? கிச்சடியை கூட இப்படி யாரும் ஊட்ட மாட்டார்கள். பணம் சம்பாதிப்பது மட்டுமே அந்தப் பட தயாரிப்பாளர், இயக்குநரின் நோக்கம். எல்லோரையும் திருப்திபடுத்தி மக்களிடையே பிரிவினையை உருவாக்க வேண்டும் என்பதுதான் படத்தின் நோக்கம். பட தயாரிப்பாளர் பேராசைக்காரர். பணம் சம்பாதிக்கவே இப்படி செய்கிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.




மிக்க மகிழ்ச்சி தோழர். மிக முக்கியமான பதிவு. தொடரடும் மதுரை செய்திகள் பணி. பகிர்கிறேன் தோழர்.