
ஓ.பன்னீர்செல்வம்
கட்சியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தேனி மாவட்டம், போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை இன்று (பிப்ரவரி 24) சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் இறக்கும் வரை மக்களுக்காக உழைத்து தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். மத்திய அரசு நிதியை எதிர்பார்க்காமல் மாநில அரசின் நிதியைக் கொண்டே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார். ஆரம்ப கல்வி முதல் முதுநிலை கல்வி வரை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கினார். பெண்களுக்கு பல்வேறு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி இன்று வரை மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு கட்சிக்கு சோதனை காலம் ஏற்பட்ட போது என்னை முதலமைச்சராக நியமித்தார். 6 மாத காலம் அவரது வழியில் அடிபிரளாமல் செயல்பட்டு வந்தேன். அதன் பிறகு ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட நிலையில் எனது பதவியை ராஜினாமா செய்தேன். 2011-ம் ஆண்டு மீண்டும் கட்சிக்கு சோதனை ஏற்பட்டபோது என்னையே முதலமைச்சராக அமரவைத்தார். எனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்தபோதும் அம்மாவின் ஆணையை ஏற்று முதலமைச்சர் பதவியை ஏற்றேன். எனக்கு பல்வேறு சூழ்நிலைகளில் நற்சான்று கொடுத்தார்.
கட்சியில் பலவித சோதனைகளை சந்தித்து விட்டேன். ஒன்றுபட்டால் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு வெற்றி என்பதை ஏற்கவில்லை. தற்போது தனிக்கட்சி தொடங்க வேண்டும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். இப்போது மட்டுமல்ல எப்போதுமே தனிக்கட்சி தொடங்கமாட்டேன். கடந்த 1 ஆண்டுக்கு முன்பே தனிக்கட்சி தொடங்குமாறு என்னிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை என தெரிவித்து விட்டேன். என்னை முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் தெரிவிக்க வேண்டும். நான் தவறு செய்தேன் என்று தெரிந்தால் அரசியலை விட்டே விலகத் தயார்” என்றார்.



