பொதுவுடமை போராளியை இழந்தோம்… தமுஎகச இரங்கல்

கீழடியிலிருந்து எடுத்து வரப்பட்ட பிடி மண்ணைப் பெற்ற தோழர் இரா.நல்லகண்ணு.

தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்க மூத்த போராளியை இழந்தோம் என இரா.நல்லகண்ணுவிற்கு தமுஎகச மாநிலக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ” இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர், தமிழக பொதுவுடைமை இயக்கத்தின் மிகச் சிறந்த போராளி இரா.நல்லகண்ணு அவர்கள் இழப்பு தமிழ்ச்சமூகத்தின் பேரிழப்புகளில் ஒன்றாகும். 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் தொடர்ந்து இயங்கி வந்த தோழர் இன்றோடு தனது இயக்கப் பணிகளை நிறுத்திக் கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925-ல் பிறந்த தோழர் நல்லக்கண்ணு அவர்கள் 18வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்திலும், விடுதலைப் போராட்டத்திலும் இணைந்து பணியாற்றினார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இந்த மண்ணையும் மக்களையும் நேசித்ததோடு, அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்த ஓய்வறியா போராளியாக செயல்பட்டவர்.

1940-களில் ஏற்பட்ட பஞ்ச காலத்தில், உணவுப் பொருட்களை பதுக்கிய பதுக்கல் காரர்களை அம்பலப்படுத்தி ஜனசக்தி இதழில் எழுதி ஏழைகளின் பசி தீர்க்க உயர்ந்த அவரின் பேனா, தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கும் பணியில் நீதிமன்றம் வரை தானே சென்று வாதாடியது. ஒரு கோடி ரூபாயை வசூல் செய்து கொடுத்தாலும், அதை கட்சிக்கே கொடுக்கும் பண்பு தான் கம்யூனிஸ்டுகளின் பண்பு என்பதை வரலாற்றில் வாழ்ந்து காட்டிய எளிய வாழ்க்கை அவருடையது. வாழ்நாள் முழுவதும் மதவாத, சாதியவாத சக்திகளுக்கு எதிராக செயல்பட்டவர், தன் சொந்த வாழ்விலும் அதில் உறுதியாக இருந்தார். 1990களில் தமிழ்நாட்டின் தென்மாவட்ட சாதிக் கலவரத்தில் தனது சொந்த மாமனார் கொல்லப்பட்ட போதும், உணர்ச்சி வசப்படாமல் அச்சூழலை அணுகியதோடு, அப்போது ஏற்பட இருந்த பெரும் சாதிக் கலவரத்தை தடுத்தவர்.

ஒரு அரசியல் தலைவராக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த எழுத்தாளராகவும், வாசகராகவும் தொடர்ந்து இயங்கி வந்தவர் தோழர் நல்லகண்ணு. தான் வாசித்த நூல்களில் சிறப்பாக ஏதேனும் இருந்தால் உடனே அதன் ஆசிரியரை அழைத்து பாராட்டக்கூடியவர். அந்த வகையில் தமிழின் சிறந்த வாசகரை நாம் தற்போது இழந்துள்ளோம்.
ஒன்றிய மோடி அரசால் கீழடி அகழாய்வு தடுத்து நிறுத்தப்பட்ட போது, அதை மீண்டும் தொடர வலியுறுத்தி தமுஎகச 2017-ல் நடத்திய தமிழர் உரிமை மாநாட்டில் தோழர் நல்லகண்ணு கலந்துகொண்டார். கீழடியிலிருந்து பிடி மண் எடுத்துவந்த நம் தோழர்களிடமிருந்து, அப்பிடி மண்ணை பெற்றுக்கொண்டார் தோழர் நல்லக்கண்ணு. தமிழர் ஆதி நாகரீக நிலத்தின் மண்ணை பெற்றுக் கொள்ளும் போது, தன் தோளில் இருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு உணர்ச்சிப் பெருக்கோடு அதை பெற்றுக்கொண்டார். இடுப்பில் இருந்த துண்டு தோளுக்கு வர போராடிய செங்கொடி மரபில் வந்த தோழர், தமிழர் மரபு என்கிற போது அதே துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு பெற்றது அவரின் தமிழ் மற்றும் தமிழர் உணர்வின் சாட்சியாகும்.

வயது மூப்பின் காரணமாக தனது 101ஆவது வயதில் காலமாகியுள்ள தோழர் நல்லகண்ணு அவர்கள் இதுவரை எளிய மக்களுக்காக பயன்பட்டுவந்தார். இனி அவரின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் பணிக்கு பயன்படப் போகிறது. அந்த வகையில் வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும் பயனுள்ள வாழ்வை வாழ்ந்து மறைந்துள்ள தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது செவ்வஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *