
நடிகை ரன்யா ராவ்
பெங்களூருவில் நடிகை ரன்யா ராவ் மீது ரூ.102 கோடி தங்கக் கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கன்னட திரைப்படத்துறையைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32) என்ற ஹர்ஷவர்தினி ரன்யா, துபாயில் இருந்து பெங்களூரு வந்த பிறகு 2025 மார்ச் 3-ம் தேதியன்று வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (டிஆர்ஐ) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் மீட்டனர். மார்ச் 2024 முதல் மார்ச் 2025 வரை ரூ.102.55 கோடி மதிப்புள்ள 127.28 கிலோ தங்கம் இந்தியாவிற்குள் கடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. கடத்தப்பட்ட தங்கம் நகை வியாபாரிகள் மூலம் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டது என்றும் தெரிவித்தது.
தங்கக்கட்டிகள் விற்பனையின் மூலம் கிடைத்த பணம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஹவாலா பணமாக மாற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. அத்துடன் இந்த நிதி மேலும் அடுக்கடுக்காக பல வங்கிக் கணக்குகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் திருப்பி விடப்பட்டு, முறையான வணிக பரிவர்த்தனைகளாகத் தோன்றியதாக அது கூறியது. விசாரணையில், வெளிநாடுகளில் தங்கம் கொள்முதல் செய்தல், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்தல், ரொக்கமாக அப்புறப்படுத்துதல் மற்றும் ஹவாலா மற்றும் வங்கி வழிகள் மூலம் வருமானத்தை மோசடி செய்தல் செய்தது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து பெங்களூருவில் உள்ள சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) நீதிமன்றத்தில், நடிகை ரன்யா ராவ் மீது ரூ.102 கோடி தங்கக் கடத்தல் வழக்கில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவ் மற்றும் அவரது கூட்டாளிகள் தருண் கோண்டுரு, பெல்லாரியைச் சேர்ந்த தங்க வியாபாரி சாஹில் சகாரியா ஜெயின் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



