
ஆர்.நல்லகண்ணு உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 101. சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் நல்லகண்ணு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மலர் வளையம் வைத்து மறைந்த நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர், 72 குண்டுகள் முழங்க 24 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி சுட்டனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைவர்கள் நல்லகண்ணுக்கு ‘வீர வணக்கம்’ செலுத்தினர். இதனைத் தொடர்நது ஆர்.நல்லகண்ணுவின் உடல் அவரது விருப்பப்படி சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது. நல்லகண்ணுவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி அவருக்கு விடை கொடுத்தனர்.



