
சென்னை அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2001, 2014, 2016-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவரான ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, நீதி கேட்டு போராட்டம் நடத்தி வந்தார். எந்த கோரிக்கையுமின்றி அதிமுகவில் சேரத் தயாராக இருப்பதாக பல்வேறு கட்ட முயற்சிகளை ஓ.பன்னீர்செல்வம் முயன்றார். ஆனால், அவரை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 27) சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகைதந்த ஓ. பன்னீர்செல்வத்தை பூங்கொத்து கொடுத்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வரவேற்றார். அவரை மு.க.ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார். ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.



