நான் சினிமாவிற்கு வந்ததற்குக் காரணமே விஜய் தான்… மாரி செல்வராஜ் பேட்டி

திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ்

நான் சினிமாவிற்கு வந்ததற்குக் காரணமே விஜய் தான் என்று திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார்.

தூத்துக்குடி வ.உ.சி. கலைக்கல்லூரியின் பவள விழாவில் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டார். இதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அடுத்ததாக தனுஷ் இயக்கும் படத்தை இயக்குகிறேன். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது ஒரு வரலாற்று மற்றும் அரசியல் சார்ந்த படமாக இருக்கும். என் கேரியரில் இந்த படம் முக்கியமானதாக இருக்கும்.

சாதி, மதம், பிரிவினைவாதம் போன்றவை சட்டத்திற்கு எதிரானவை. சட்டம் மட்டுமின்றி, மனித மனங்களும் மாற வேண்டும். அனைவரும் சமம் என்ற உணர்வு சமூகத்தில் வலுப்பெற வேண்டும். மனிதர்களின் அகத்தோடு பேசும் படைப்புகள் இப்போது வரத் தொடங்கியுள்ளன. சாதி, மத பிரச்சனைகள் அவசியமற்றவை. எதற்காக நடந்தாலும் வன்முறை தவறு, மனித வாழ்வின் மிகப்பெரிய சந்தோஷம் சேர்ந்து வாழ்வதே. அடுத்த தலைமுறைக்காக பொறுப்புடன் நடக்க வேண்டும். சமூகத்தின் முக்கியத் தேவையே உரையாடல், எனவே, இதுபோன்ற விஷயங்கள் வீடுகளிலும் பேசப்பட வேண்டும்.

இன்றைய திரைப்பட இயக்குநர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் வருகின்றனர். ஒரு சாதாரண மாணவன் பாதிக்கப்படக் கூடாது என்ற குறைந்தபட்சம் எண்ணம் இருக்கிறது. நான் இதுவரை ஐந்து படங்கள் எடுத்துள்ளேன். அவை அனைத்தும் சில முக்கியமான கருத்துகளை வலியுறுத்துகின்றன. அதுவே எனக்கு மதிப்பை பெற்றுத்தந்தது. தற்போது நான்கு முக்கியமான படங்களை இயக்கவுள்ளேன். சமூக மாற்றத்திற்காக என் ஆயுதம் சினிமா தான். நான் தேர்ந்தெடுத்த பாதை சினிமா என்றாலும், அது இயல்பாகவே அரசியலோடு இணைந்த பயணமாக உள்ளது. அரசியலுக்கு வர வாய்ப்பில்லை.

சிறுவயது முதலே நடிகர் விஜயை விரும்புகிறேன். நான் சினிமாவிற்கு வந்ததற்குக் காரணமே விஜய் தான். அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும் போது புரிந்து கொள்ள முடியும், அது குறித்து பேச முடியும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், வரவேற்க வேண்டும்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *