
வெப்ப நிலை உயர்வு
தமிழ்நாட்டில் 3 மாதங்களுக்கு வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பனிக்காலம் நீண்டிருந்த நிலையில், கோடைகாலத்தில் வெயில் வாட்டி வதைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் முதல் மே மாதம் வரை 3 மாதங்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 4-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.



