மோடியின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன?: ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

என்டிஏ பொதுக்கூட்டம்
இதுகுறித்து தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில் நேற்று (மார்ச் 1) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், திமுக அரசு மீது பிரதமர் மோடி முன்வைத்த ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். புதுக்கோட்டையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுக அரசு 20 சதவீதம் ஊழல் செய்யும் அரசு என்று குற்றம் சாட்டினார். பல்வேறு அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் கண் பொத்தி, வாய் மூடி, காது கேளாதவர் போல், குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து பதில் சொல்லாமல் மவுனியாக நாடகமாடுவது ஏன்?

பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மதுரையில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் மலிந்துள்ளதாகக் கூறி மணல் கொள்ளை ஊழல்: ரூ.4,700 கோடி, டாஸ்மாக் மதுபானம் முறைகேடு: ரூ.40,000 கோடி, அரசுப் பணி நியமன ஊழல்: ரூ.900 கோடி, அரசு ஒப்பந்த ஊழல்: ரூ.1,000 கோடி, பணிஇடமாற்ற ஊழல், ரூ.365 கோடி, என ஏறத்தாழ 48 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்து பேசி, தமிழக மக்களின் வரிப்பணம், திமுக ஆட்சியில் எந்தெந்த துறையில் எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டது என்பதை, விவரமாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

பதில் அளிக்க வேண்டும்
வழக்கமாக அமைச்சர்கள் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தான் போட்டியிடுவார்கள், ஆனால் திமுக அமைச்சர்கள் யார் அதிக ஊழல் செய்வது என்பதில் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள் என்று பிரதமர் மோடி மிகுந்த வருத்தத்துடன் தன்னுடைய வேதனையை தெரிவித்தார்.
நல்லாட்சி நாயகன் போல கூட்டங்களில் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய்யை மிஞ்சி வீராப்பு வசனங்கள் பேசும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் தமிழக மக்கள் மன்றத்தின் முன் உடனடியாக பதில் சொல்ல வேண்டும்.

பிரதமரின் ஆவாஸ் யோஜனா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் சுமார் 3 லட்சம் வீடுகள் கட்டப்படுவதை திமுக அரசு தடுத்து நிறுத்தியது ஏன்? உயர் நீதிமன்றம் ஊழல் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களை பாதுகாக்கும் மாயம் என்ன? மர்மம் என்ன? ஊழல் பங்கின் லாபம் என்ன என்பதையும் உடனடியாக விளக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *