ஈரானில் சிக்கியுள்ள 3,000 இந்திய மாணவர்கள்… உடனடியாக மீட்க சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

ஈரான், இஸ்ரேலுக்கு இடையே நடக்கும் போர்.

ஈரானில் சிக்கித் தவிக்கும் 3,000 இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வரவேண்டும் என்று மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலால் ஈரானில் பயின்று வரும் சுமார் 3,000 இந்திய மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, தெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஈரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இடையே கடும் அச்சத்தில் உள்ளனர்.

சு.வெங்கடேசன் எம்.பி

ஈரானில் நிலவும் அபாயகரமான சூழலைக் கருத்தில் கொண்டு, மார்ச் 3, 2026 அன்று இந்தியத் தூதரகம் தெஹ்ரானில் இருந்த பெரும்பாலான மாணவர்களை சுமார் 140 கி.மீ தொலைவில் உள்ள கோம் நகருக்குப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்துள்ளது. அங்கு அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிட வசதிகளைத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இஸ்ஃபஹான் மற்றும் உருமியா போன்ற பிற நகரங்களில் உள்ள மாணவர்கள் இன்னும் ஏவுகணைச் சத்தங்களுக்கு இடையே தவிப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

தற்போது ஈரான் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், விமானங்களை இயக்குவது சாத்தியமற்றதாக உள்ளது. எனவே, உருமியா போன்ற எல்லைப் பகுதிகளில் உள்ள மாணவர்களை நிலவழியாக அண்டை நாடுகளான ஆர்மீனியா அல்லது அஜர்பைஜானுக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு மீட்கும் திட்டத்தை அரசு விரைவுபடுத்த வேண்டும் . மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர்களது பெற்றோர்களுக்குத் சரியான தகவல்களை வழங்க 24 மணி நேரத் தகவல் மையத்தை வலுப்படுத்த வேண்டும். வதந்திகளால் ஏற்படும் பதற்றத்தைத் தவிர்க்க இது மிக அவசியமாகும்.இடமாற்றம் செய்யப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் உளவியல் ஆலோசனைகளைத் தூதரகம் தொடர்ந்து வழங்க வேண்டும்.

ஈரானில் உள்ள நமது மருத்துவ மாணவர்களின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதே நமது முதன்மையான கடமையாகும். இதற்காக ஒன்றிய அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *