
சமூக வலைதளம்.
நாங்குநேரி இரட்டை கொலை விவகாரத்தில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்துவில் 2 நாட்களுக்கு முன்பு 9 பேர் கொண்ட கும்பல் சாலையில் சென்றவர்களை அரிவாளால் கொடூரமாக வெட்டியது. இதில் மாற்றுத்திறனாளியான ஜான் மற்றும் வட மாநில தொழிலாளர் டிரானத் கட்டா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதாகவும், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் கடந்த மார்ச் 2- ம் தேதி அன்று இரவு நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பின்னர் நாங்குநேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விரிவான புலன் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பிரிவினையைத் தூண்டும் விதமாகவும், வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலும் பதிவுகள் வெளியிடப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் கருத்துகள் பகிர்ந்த நபர்கள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விஜயநாராயணம் மற்றும் நாங்குநேரி காவல் நிலையங்களில் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் செய்த நபர்கள் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் விஷமத்தனமான மற்றும் பிரச்னைக்குரிய பதிவுகளை பகிர்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



