
ஆர்.என்.ரவி
சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், தமிழக அரசுக்கு பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
சர்ச்சை நாயகன்
‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு, ஆளுநரும் தேவையில்லை’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அதை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசுக்கு பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாட்டின் ஆளுநராக 2021 செப்டம்பர் 18-ம் தேதி பொறுப்பேற்றார். அடுத்த சில நாட்களிலேயே, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறைவாரியாக அறிக்கை தருமாறு தலைமைச் செயலாளராக இருந்த இறையன்புக்கு உத்தரவிட்டதன் மூலம் முதல் சர்ச்சையில் சிக்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
நீட் தேர்வு மசோதா
தமிழக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் நேரடியாக எப்படி தலையிடலாம் என திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. மாநில சுயாட்சிக்கு எதிரான ஆளுநர் நடவடிக்கையை கண்டித்தன. இதையடுத்து 2022 பிப்ரவரி 4-ம் தேதி தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை, சட்டப்பேரவை நிறைவேற்றிய 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி அதை சபாநாயகருக்குத் திருப்பி அனுப்பியதன் மூலம் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக்கட்சிகள் புறக்கணித்தன. இதன் தொடர்ச்சியாக அரசியலமைப்புக்கு எதிராக ஆளுநர் நடந்து கொள்வதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் திமுக மனு அளித்து, அவரைத் திரும்பப் பெறக் கோரியது. ஆனாலும், ஆளுநர் ஆர்.என்.ரவி அசரவில்லை.
சட்டமன்ற வெளிநடப்பு
தமிழக சட்டமன்றத்தில் 2022-ம் ஆண்டு முதல் உரையை முழுமையாக படித்த ஆளுநர் ரவி, 2023-ம் ஆண்டு சட்டப் பேரவையில் அரசு தயாரித்த உரையில் இருந்த சில சொற்களை உச்சரிக்க மறுத்தார்9. குறிப்பாக மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் போன்ற சொற்களை ஆளுநர் தவிர்த்தார். ஆனால், அரசு கொடுத்த உரையில் இருப்பது தான் அவையில் நிறைவேறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கவும் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வேகமாக வெளிநடப்பு செய்தார். இது போல அடுத்து வந்த மூன்று சட்டப்பேரவை கூட்டங்களில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று வெளிநடப்பு செய்தார்.
கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள்
கடந்த 2023 ஜனவரி 4 அன்று தமிழ்நாடு என்பதற்குப் பதிலாக தமிழகம் என்பதே மிகவும் பொருத்தமான சொல் என்று கூறிய ஆளுநர் ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கினார். இதன் பின் அவரின் உத்தரவை அவரே திரும்பப் பெற்றார். இந்த நிலையில், 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் காலதாமதப்படுத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடியது.
உச்சநீதின்றம் விமர்சனம்
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது தவறானது என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது. அத்துடன் கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களையும் தங்களது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றியதாக உத்தரவிட்டது. ஆனாலும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு குறித்து விமர்சனங்களையும் செய்து வந்தார்.
வள்ளுவருக்கு காவி
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு இரண்டு முறை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் பொது வெளியில் கடும் விமர்சனத்தை எழுப்பியது. இதன் பின் தமிழக அரசின் பெரும் அழுத்தத்திற்கு பிறகே ஆன்லைன் ரம்மிக்கான தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்க நிகழ்வின் அழைப்பிதழில் வள்ளுவர் படத்திற்கு காவி உடை, பூணூலுடன் அச்சிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆளுநர் மாற்றம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் மத்திய பாஜக அரசு, தமிழக அரசின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்று திமுக வெளிப்படையாகவே விமர்சனம் வைத்தது. அத்துடன் ஆளுநருக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தியது. இந்த நிலையில், தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநராக பதவி வகிக்கும் அவருக்கு தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஆளுநர் ரவி மாற்றப்பட்டது ஆளும் திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



