
ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டணமின்றி வழங்கப்படும் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் கூறினார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் மகளிர் தின விழா இன்று (மார்ச் 7) கொண்டாடப்பட்டது. இந்த விழா மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி தவெக தலைவர் நடிகர் விஜய் பல்வேறு வாக்குறுதிகளை மகளிர் தினவிழாவில் கொடுத்தார்.
இவ்விழாவில் விஜய் பேசுகையில், ” பெண்கள், குழந்தைகளுக்கு, முதியோருக்கு என தனி இலாகா உருவாக்கப்படும். அது எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும். 60 வயது இருக்கும் பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.2500 கொடுக்கப்படும். அரசு வேலைவாய்ப்பில் இருக்கும் பெண்களைத் தவிர மற்றவர்களுக்கு வழங்கப்படும். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.
பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், தரமான பட்டு சேலை அண்ணன் சீராக வழங்கப்படும். 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பள்ளிக் கல்வி இடைநிற்றல் இல்லாமல் செய்வதற்காக தாய் அல்லது பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும். வெற்றி பயணம் திட்டமாக அனைத்து அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும். மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் உருவாக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
சுய உதவி குழுக்கள் மூலம் ரூ.5 லட்சம் 100 சதவீதம் மானியமாக வழங்கப்படும். தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.



