நற்பெயருக்கு களங்கம்: டி.ஆர்.பாலுவுக்கு எதிராக அண்ணாமலை அவதூறு வழக்கு

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு எதிராக, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்த போது திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பலரின் சொத்து விவரப் பட்டியலை, 2023 ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டார். செய்தியாளர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட அந்த பட்டியலில், திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர் பாலு, அவரின் மகனும் அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு மொத்தம் 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டி.ஆர் பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது, டி.ஆர்.பாலு வைத்திருக்கும் 18 கார், அவருடைய மகன் ராஜ்குமார் நடத்தும் கோல்டன் வாட்ஸ் மதுபான ஆலை நிறுவனம் உள்ளிட்டவை தொடர்பாக டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை கேள்வி எழுப்பினர். இந்த குறுக்கு விசாரணையின் போது அண்ணாமலை அவரின் மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கி இருப்பதாகவும், ஊழல் முறைகேடு குற்றச்சாட்டால் தான் அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது உண்மைதானா என டி.ஆர் பாலு கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக தவறான தகவல்களை அளித்து, உள்நோக்குடன் கேள்வி எழுப்பிய டி.ஆர். பாலு மீது அவதூறு வழக்கு விரைவில் தொடரப்படும் என அண்ணாமலை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டி.ஆர் பாலுவுக்கு எதிராக அண்ணாமலை புதிய மனுவை இன்று (மார்ச் 10) நேரில் வந்து தாக்கல் செய்தார். அதில், ‘டி.ஆர் பாலு நீதிமன்றத்தில் தெரிவித்த விவரங்கள் உண்மைக்கு மாறானவை, அவர் தெரிவித்த விவரங்கள் தனக்கும், தன்னுடைய மனைவியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் டி.ஆர் பாலு மீது அவதூறு வழக்கின் கீழ், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *