தமிழகத்தில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கும் நிலையில், 9 லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதவுள்ளனர்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (மார்ச் 11) முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரையில் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வை, 2,467 பள்ளிகளில் படித்த 8,82,806 மாணவர்கள், 26,196 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9,09,002 பேர், 4219 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வெழுதுகின்றனர்.

மேலும், இந்த பொதுத்தேர்வினை 395 சிறைவாசிகளும் எழுதவுள்ளனர். காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1.15 வரையில் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு, 10.10 மணி வரையில் படிப்பதற்கு அனுமதிக்கப்படும். அதன் பின்னர் விடைத்தாள் கொடுக்கப்பட்டு, தேர்வர்கள் விவரங்களை சாிபார்த்து கையெழுத்து போட வேண்டும். காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரையில் தேர்வு நடைபெறும்.

தமிழ்நாடு முழுவதும் தேர்வுப் பணியில் 49,500 ஆசிரியர்களும், முறைகேடுகளை தடுக்க ஐந்தாயிரம் பறக்கும் படையினரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தேர்வு நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 9498383075 மற்றும் 9498383076 ஆகிய செல்போன் எண்களை அழைத்து தெரிவிக்கலாம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது..

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *