
திகில் படங்களை தயாரித்து இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட நடிகர் தக்காளி சீனிவாசன் காலமானார்.
தமிழ் திரைப்படத்துறையில் 1985-ம் ஆண்டுக்குப் பிறகு வெளியான சில திகில், கொலை படங்களுக்குச் சொந்தக்காரர் தக்காளி சீனிவாசன். திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், வசனக்கர்த்தா என பன்முகத்திறமை கொண்ட தக்காளி சீனிவாசன் பிரபு, அம்பிகா நடித்த இவர்கள் வருங்கால தூண்கள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பிரபு, சரண்யா, லிஸி நடித்த மனசுக்குள் மத்தாப்பு படத்தை தயாரித்தார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பொன்மாங்குயில் சிங்காரமாய் என சூப்பர் ஹிட் பாடல் இடம் பெற்ற இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கமல்ஹாசன் நடித்த சூரசம்ஹாரம் படத்தில் தக்காளி சீனிவாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
வேலுபிரபாகரன் இயக்கிய நாளைய மனிதன் படத்தில் பிரேமியுடன் இணைந்த தக்காளி சீனிவாசன், பிரேமி- ஸ்ரீனி என்ற பெயரில் இசையமைப்பாளராக அறிமுகமானார். திகில் கதையம்சம் கொண்ட இப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த அதிசய மனிதன் படத்தை தயாரித்ததுடன் அப்படத்திற்கு இசையமைத்தார். ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோகவனம், அடுத்தடுத்து ஆகிய படங்களை இயக்கினார். இதில் சில படங்களை தயாரித்ததுடன், இசையும் அமைத்தார்.
திகில் படங்களுக்குரிய வகையில் மிரட்டும் இசையை வழங்கிய தக்காளி சீனிவாசன் தயாரித்து இயக்கிய ஹாலிவுட் பாணி ஹாரர் வகை படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமிருந்தது. ஒரு ஆசிரமம் நடத்தி, தத்தெடுத்த குழந்தைகளுடன் மனிதநேய சேவையில் ஈடுபட்டு வந்த தக்காளி சீனிவாசன் பெங்களூரில் நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்குகள் இன்று (மார்ச் 11) பெங்களூரில் நடைபெறுகிறது.



