
ராஜீவ் காந்தி
திமுக மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் வீரமணி ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ராஜீவ் காந்தி. அந்த கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தவர். அந்த கட்சி சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் ஊடகப் பிரிவு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதன் பின் திமுக மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவை தெற்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட ராஜீவ் காந்தி ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில், மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ் காந்தி திடீரென மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பதவிக்கு ஈரோட்டைச் சேர்ந்த வீரமணி ஜெயக்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக மாணவரணியின் முதல் பெண் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வீரமணி ஜெயக்குமார்.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ராஜீவ் காந்தி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” தமிழ்,தமிழர், திராவிடம், மதச்சார்பின்மை, சமூகநீதி என்னும் கொள்கை வழி நின்று தமிழ்நாட்டு மக்களின் அரசியல் அரணாக நிற்கும் கழகத்தில் கொள்கை பரப்பு என்னும் மாபெரும் அணியின் இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கிய இனமானத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், இளந்தலைவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். திசை எங்கும் பரப்புவோம் திராவிட அரசியல்” என்று பதிவிட்டுள்ளார்.



