‘கைகட்டி அணிலாக மாறிய கோழை தான் விஜய்’… சாட்டை துரைமுருகன் கடும் விமர்சனம்

விஜய், சாட்டை துரைமுருகன்

ஒரு படத்துக்காகக் கைகட்டி அணிலாக மாறிய கோழை அல்ல நடிகர் ரஜினிகாந்த் என்று நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

ரஜினி மீது விமர்சனம்
தமிழக அரசை கண்டித்து தவெக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சு, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உருவாக்கியுள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா,“எம்ஜிஆருக்கு பிறகு அரசியலில் உள்ள சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என ரஜினிகாந்த் நினைத்தார். ஆனால் திமுக பல மிரட்டல்களை கொடுத்து அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். கடைசியில் இன்றைக்கு திமுக குடும்பத்தின் ரெட் ஜெயன்ட் பேனரில் அவர் படம் நடித்து வருகிறார். அவர் மேல் விமர்சனம் கிடையாது. அந்த மன வலிமை நம் தலைவர் விஜய்யிடம் உள்ளது. தன்னைத் திட்டிக்கொண்டே இருக்கும்போதும், அழுத்தம் கொடுக்கும்போதும் பயந்துக்கொண்டு வீட்டுக்குள் உட்காரவில்லை. தமிழ்நாட்டில் மிரட்ட முடியாத, விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே ஆள் விஜய் மட்டும் தான்” என்று பேசினார்.

ஆதவ் அர்ஜூனா

ஆதவ் அர்ஜூனாவுக்கு கண்டனம்
அவரது பேச்சுக்கு ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஜினிகாந்த் ரசிகர் மன்ற வேலூர் மாவட்ட செயலாளரான சோளிங்கர் ரவி வெளியிட்ட பதிவில், “ரஜினிகாந்த் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே… கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்புக்களை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார். மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல; தனது பலத்தை நிருபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை. கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது. தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும். பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கி கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால் தான் அவர் நிரந்தர தலைவர்” என்று ஆதவ் அர்ஜூனாவிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சாட்டை துரைமுருகன்
இதற்கிடையே ரஜினிகாந்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியான சாட்டை துரைமுருகனும் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “தன்னை நம்பிய ரசிகர்களை மனதில் வைத்து அரசியல் பிரவேசத்தில் இருந்து விலகுவதாக ரஜினிகாந்த் அவர்கள் அறிவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்பாவி ரசிகர்களை ஏமாற்றி அவர்களை அரசியல்படுத்தாமல் இரத்தம் உறிஞ்சும் அட்டை போலப் பயன்படுத்தும் பக்காமாஸ் கும்பலுக்கு ரஜினிகாந்தைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை.

தன்னுடைய ரஜினிகாந்த் வெறுப்பை ஆதவ் அர்ஜுனாவை வைத்துப் பேச வைத்திருக்கிறார் பக்காமாஸ். ரஜினிகாந்த் அரசியல் வருகையை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இப்போதும் அவர் அரசியல் நிலைப்பாடுகள் மீது முரண்கள் உண்டு; ஆனால் தன் கருத்தைச் சொல்வதில் துணிச்சலானவர் ரஜினிகாந்த். ஜெயலலிதா அம்மையார் உச்சத்தில் இருந்தபோதே எதிர்த்துப் பேசிய துணிச்சல்காரர். உங்களைப் போல ஒரு படத்துக்காகக் கைகட்டி அணிலாக மாறிய கோழை அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *